தொழில் நிறுவனங்களுக்கு மானியத்தில் கடன் உதவி

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில் தொழில் நிறுவனங்களுக்கு மானியத்தில் கடன் உதவி வழங்கப்படுவதாக கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.;

Update:2023-08-21 00:33 IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடன் மேளா

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும், பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

வேலூர் கிளை அலுவலகத்தில் இதற்கான சிறப்பு தொழில் கடன் மேளா வருகிற 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.

மானியத்தில் கடன்

தகுதிபெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.1 கோடியே 50 லட்சம் வரை வழங்கப்படும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் 35 சதவீத மானியம் மற்றும் 6 சதவீத வட்டி மானியத்துடன் கூடிய கடனுதவி அளிக்கப்படும்.

இந்த முகாம் காலத்தில் சமர்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படும். புதிய தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் இதனை பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்