நண்பரை வைத்து கணவரை தாக்கிய துணை நடிகை

சினிமாவில் நடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால், நண்பரை வைத்து கணவரை துணை நடிகை தாக்கி உள்ளார். இது அம்பலமானதால் போலீசில் சிக்கிக்கொண்டார்.;

Update:2023-03-26 00:15 IST

பொள்ளாச்சி

சினிமாவில் நடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால், நண்பரை வைத்து கணவரை துணை நடிகை தாக்கி உள்ளார். இது அம்பலமானதால் போலீசில் சிக்கிக்கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தனியார் நிறுவன ஊழியர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நல்லிகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42), தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், கோவை உடையம்பாளையத்தை சேர்ந்த ரம்யா (30) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று ஜமீன்முத்தூர் பகுதியில் ரமேசும், ரம்யாவும் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

அப்போது அவர்களை வழிமறித்த மர்ம நபர், ரமேசை தாக்கியதாக தெரிகிறது. மேலும் பிளேடால் ரமேசின் கழுத்து, கையில் கீறியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் ரமேசுக்கு மட்டும் காயம் ஏற்பட்டு இருந்தது மற்றும் ரம்யா கூறிய தகவல்கள் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

துணை நடிகை

இதைத்தொடர்ந்து ரம்யாவின் செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த டேனியல் சந்திரசேகர் (45) என்பவருடன் அடிக்கடி பேசியது தெரியவந்தது. மேலும் அவரை வைத்து ரமேசை தாக்கியதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரம்யா, டேனியல் சந்திரசேகர் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் கைதான ரம்யா அளித்த வாக்குமூலம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

கணவர் அடிக்கடி குடித்து விட்டு கொடுமைப்படுத்தியதால் ரம்யா குழந்தைகளுடன் கோவையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றார். பின்னர் ரமேஷ் கோவைக்கு சென்று சமாதானப்படுத்திய பிறகு, அவ்வப்போது குழந்தைகளை மட்டும் நல்லிகவுண்டன்பாளையத்தில் உள்ள வீட்டிற்கு ரம்யா அழைத்து வந்துள்ளார். இதற்கிடையே சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ரம்யாவுக்கு ஆசை ஏற்பட்டது. இதற்கு ரமேஷ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த டேனியல் சந்திரசேகர் மூலம் சினிமாவில் நடிக்க ரம்யாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து சின்னத்திரை நாடகங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.

கணவர் மீது தாக்குதல்

இந்தநிலையில் ரமேஷ் அவரது வீட்டை விற்பனை செய்வதற்கு முடிவு செய்ததாக தெரிகிறது. இதற்கிடையில் டேனியல் சந்திரசேகர் பொள்ளாச்சியில் ஒரு வீட்டை ரூ.10 லட்சத்திற்கு வாங்கி தருவதாக உறவினர் ஒருவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து ரம்யாவை சினிமாவில் நடிக்கக்கூடாது என்று ரமேஷ் மீண்டும் கூறியதாக தெரிகிறது. மேலும் குடித்து விட்டு தாக்கியதால் ஆத்திரம் அடைந்த ரம்யா, இதுகுறித்து டேனியல் சந்திரசேகரிடம் கூறியுள்ளார். மேலும் ரமேசை தாக்கி, மிரட்டி வைத்தால் அந்த வீட்டை ரூ.10 லட்சத்துக்கு வாங்கி தருவதாக ரம்யா கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து ரம்யா, ரமேசை வெளியில் சென்று பேசலாம் என்று மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று உள்ளார். மேலும் எங்கு செல்கிறோம், எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது குறித்து செல்போனில் டேனியல் சந்திரசேகருக்கு குறுந்தகவல் அனுப்பி உள்ளார். உடுமலைக்கு செல்லும் வழியில் திட்டத்தை செயல்படுத்த முடியாததால், ஜமீன்முத்தூரில் வைத்து ரமேசை தாக்கி விட்டு, டேனியல் சந்திரசேகர் தப்பி சென்று விட்டார். மேலும் நண்பரை வைத்து கணவரை தாக்கி விட்டு நாடகம் ஆடிய ரம்யா போலீசாரின் விசாரணையில் சிக்கிக்கொண்டார்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்