காதல் கணவரை தாக்கி கொலை மிரட்டல்: அரசு பள்ளி ஆசிரியை பணியிடைநீக்கம்-தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

Update: 2023-02-09 18:45 GMT

தர்மபுரி:

காதல் கணவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் சிக்கிய அரசு பள்ளி ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

அரசு பள்ளி ஆசிரியை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் காரல் மார்க்ஸ் (வயது 38). போட்டித் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி தேவி (38). இவர் கீரைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்கள் கடந்த 2011-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதியினர் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் தேவியின் வங்கி கணக்கில் இருந்து காரல் மார்க்ஸ் பணம் எடுத்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆசிரியை தேவி உள்ளிட்ட 4 பேர் காரல் மார்க்சை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

பணி இடைநீக்கம்

இது தொடர்பாக காரல் மார்க்ஸ் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், கொலை மிரட்டல் விடுத்தல், தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தேவி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில் சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அரசு பள்ளி ஆசிரியை தேவியை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்