நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பணிஇடை நீக்கம் கலெக்டர் ஸ்ரேயா சிங் நடவடிக்கை
ஆதிதிராவிடர் நலத்துறையில் பட்டா மாறுதல் வழங்கியதில் விதிமுறை மீறல் கண்டறியப்பட்டதை தொடர்ந்து நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் மற்றும் வருவாய் ஆய்வாளரை பணிஇடை நீக்கம் செய்து கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார்.;
நாமக்கல்:
ஆதிதிராவிடர் நலத்துறையில் பட்டா மாறுதல் வழங்கியதில் விதிமுறை மீறல் கண்டறியப்பட்டதை தொடர்ந்து நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் மற்றும் வருவாய் ஆய்வாளரை பணிஇடை நீக்கம் செய்து கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார்.
ஆய்வு
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தாசில்தாராக பாஸ்கர், வருவாய் ஆய்வாளராக கருணாகரன் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.
இவர்கள் ஏற்கனவே வழங்கிய பட்டாக்களை பெயர் மாற்றம் செய்து விதிமுறைகளை மீறி அதே இடத்தில் வேறு நபருக்கு பட்டா வழங்குவதாக கலெக்டர் ஸ்ரேயா சிங்கிற்கு புகார் சென்றது. இதையடுத்து அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென அவர்களது அலுவலகத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அலுவலகத்தில் ஆவணங்கள் முறையாக பராமரிக்கவில்லை என்பது தெரியவந்தது. மேலும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கியதிலும், பட்டா மாறுதல் செய்ததிலும் சில விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டன.
பணியிடை நீக்கம்
இதையடுத்து தாசில்தார் பாஸ்கர், வருவாய் ஆய்வாளர் கருணாகரன் ஆகிய இருவரையும் பணிஇடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மரகதவள்ளிக்கு உத்தரவிட்டார்.
அதிகாரிகளின் முதல்கட்ட விசாரணையில் நிலமற்ற ஏழைகளுக்கு இ-பட்டா முறையில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பட்டா வழங்கப்பட்டு வரும் நிலையில், அதை பின்பற்றாமல் இவர்கள் விதிமுறைகளை மீறி முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அரசு வழங்கும் இலவச வீட்டுமனை பட்டாக்களை 30 ஆண்டுகளுக்கு விற்கவோ பெயர் மாற்றம் செய்யவோ முடியாத நிலையில், விதிமுறைகளை மீறி அதனை பெயர் மாற்றம் செய்து கொடுத்து இருப்பதும் தெரியவந்துள்ளது.
ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான காலி இடங்களில் கலெக்டரின் அனுமதி இன்றி பட்டா வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.