வீட்டு சுவர்களில் வரையப்பட்ட குறியீடுகள்

திண்டுக்கல் புறநகர் பகுதியில் வீடுகளின் சுவர்களில் விதம் விதமான குறியீடுகள் வரையப்பட்டுள்ளன. கொள்ளையடிக்க திட்டமிட்டு வரையப்பட்டதாக பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.;

Update:2023-03-18 22:32 IST

விதம் விதமான குறியீடுகள்

திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் முயற்சி நடந்து வருகிறது. இதுஒருபுறம் இருக்க திண்டுக்கல் அறிவுதிருக்கோவில் அருகே உள்ள வேதாந்திரி நகர், கோல்டன் நகர் பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் மர்ம நபர்கள் விதவிதமான குறியீடுகளை கரிக்கட்டையால் வரைந்துள்ளனர்.

அதன்படி சில வீடுகளின் சுவர்களில் ஆங்கிலத்தில் எக்ஸ், ஓய் என்று எழுதியுள்ளனர். மேலும் சில வீடுகளில் கேள்விக்குறி அடையாளமும் உள்ளது. தங்களது வீடுகளில் எழுதப்பட்டுள்ள இந்த குறியீடுகளை நேற்று காலை கண்ட பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

சினிமா படபாணியில்...

'தீரன் அதிகாரம்' என்ற சினிமா படம் கொள்ளையர்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இதில், வியாபாரிகள் போல் ஒவ்வொரு தெருக்களில் சுற்றும் கொள்ளையர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள வீடுகளை நோட்டமிடுவர். பின்னர் அங்கு வீட்டில் யார் இருக்கிறார்கள்?, எத்தனை பேர் உள்ளனர்? என்பதை பார்ப்பார்கள்.

இந்த வீட்டில் கொள்ளையடித்தால் சிக்கி கொள்ள மாட்டோம் என்ற சூழல் இருந்தால், அந்த வீடுகளில் கொள்ளையர்கள் மர்ம குறியீட்டை வரைந்து வைத்து விடுவர். பின்னர் இரவில், வருகிற வேறு கும்பலை சேர்ந்தவர்கள் குறியீடு உள்ள வீடுகளில் இறங்கி துணிகரமாக கொள்ளையடித்து செல்வர். ஒவ்வொரு குறியீட்டுக்கும் ஒருவித அர்த்தம் இருக்கும். இந்த சினிமா பட பாணியில், கொள்ளையர்கள் வீடுகளில் குறியீடு வரைந்து உள்ளார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

போலீஸ் ரோந்து

குறிப்பிட்ட குறியீடு உள்ள வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் கும்பல் முயன்று வருகிறார்களா? என்ற சந்தேகம் அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், தங்களது வீடுகளில் வரையப்பட்ட குறியீட்டை தண்ணீர் ஊற்றி அழித்து விட்டனர்.

இருந்தபோதிலும் மர்மநபர்கள் இரவு நேரத்தில் அந்த பகுதிகளில் நடமாடுகிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு போலீசாருக்கு உள்ளது. எனவே திண்டுக்கல் புறநகர் பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்