சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா.. நாளை சோடச அபிஷேகம்

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாளை மதியம் ஆஞ்சநேயருக்கு சோடச அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.;

Update:2025-12-18 13:58 IST

குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் 18 அடி உயரம் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். பக்தர்கள் நினைத்த காரியத்தை நடத்தி கொடுக்கும் வல்லவராக திகழ்வதால் இந்த ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வருகை தருகின்றனர்.

இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான அனுமன் ஜெயந்தி விழா நாளை நடக்கிறது. இதையொட்டி முன்னதாக இன்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 8 மணிக்கு நீலகண்ட விநாயகருக்கு அபிஷேகமும், 10.30 மணிக்கு தாணுமாலய சுவாமிக்கு அபிஷேகமும்,11.30 மணிக்கு உச்ச கால தீபாராதனையும் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு கால பைரவருக்கு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.

விழாவின் சிகர நிகழ்வாக, அனுமன் ஜெயந்தியையொட்டி நாளை அதிகாலை 5 மணிக்கு ராமருக்கு அபிஷேகமும், காலை 8 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 2000 லிட்டர் பால், தயிர், களபம், சந்தனம், குங்குமம், விபூதி, மஞ்சள் பொடி, அரிசி மாவு, பன்னீர் என 16 வகையான பொருட்களால் அபிஷேகமும் (சோடச அபிஷேகம்) நடைபெறுகிறது.

முன்னதாக கோவில் கலையரங்க மைதானத்தில் காலை 9 மணி அளவில் ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் அன்னதானம் நடைபெறுகிறது. மதியம் 1 மணிக்கு ஆஞ்சநேயருக்கு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு, வடை, விபூதி, குங்குமம், பஞ்சாமிர்தம் ஆகியவை வழங்கப்படுகின்றன.

மாலை 6 மணிக்கு ராமபிரானுக்கு புஷ்பாபிஷேகமும், இரவு 7 மணிக்கு ஆஞ்சநேயருக்கு புஷ்பாபிஷேகமும் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.

விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இதற்காக 1 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்