மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றான மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றான மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
கிராமப்புற வேலைவாய்ப்புக்காக கடந்த 2005-ம் ஆண்டு, ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம்’ கொண்டுவரப்பட்டது. அதில், தகுதியுள்ள ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்துக்கும் ஒரு நிதியாண்டில் 100 நாட்கள் வேலை அளிக்கப்படுகிறது. இது, 100 நாள் வேலைத்திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
இதற்கிடையே, இத்திட்டத்தை நீக்கிவிட்டு, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையுடன் கிராமப்புற வேலைவாய்ப்பை பிணைக்கும்வகையில், வேலைவாய்ப்புக்கான வளர்ச்சியடைந்த பாரத உத்தரவாத திட்டம் கொண்டுவரப்படுகிறது.
அதன்படி, விக்சித் பாரத் ரோஜ்கர்-அஜீவிகா மிஷன் (கிராமின்) அதாவது ஊரக வேலைத்திட்டம் மசோதாவை மத்திய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மக்களவையில் நேற்று முன்தினம் அறிமுகம் செய்தார். இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்புக்குரலை பலமாக எழுப்பினர். இதற்கிடையே குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.
எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே வந்து வளாகத்தில் காந்தி சிலை நோக்கி பேரணியாக சென்றனர். காந்தி சிலை பகுதிக்கு சென்றதும் காந்தி சிலை முன் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவை ஒத்திவைக்கப்பட்டது. மேலும் இந்த மசோதா குறித்து மத்திய வேளாண்துறை மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இன்று பதில் அளித்தார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றான விபி-ஜி ராம்ஜி மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபாநாயகர் இருக்கைக்கு முன்வந்து முற்றுகையிட்டனர். இதனால் மக்களைவை நாள் முழுவதும் ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். நாளை காலை 11 மணிக்கு மக்களைவை மீண்டும் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால், 100 நாட்கள் வேலை என்பது, 125 ஆக உயர்த்தப்படுகிறது. மேலும், மத்திய அரசின் நிதி பங்களிப்பிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது மத்திய அரசு சார்பில் 60 சதவீதம் நிதி வழங்கப்படும். முன்னதாக 90 சதவீதம் வழங்கப்பட்ட நிலையில், இனி குறைவாக வழங்கப்படும்.