பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்: வேப்பூர் தாலுகா அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை உடலை வாங்க மறுத்து போராட்டம்

பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் வேப்பூர் தாலுகா அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனா்.

Update: 2022-07-15 17:36 GMT


ராமநத்தம்,

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரியநெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் ஸ்ரீமதி(வயது 16). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 13-ந்தேதி பள்ளி வளாகத்தில் ஸ்ரீமதி பிணமாக மீட்கப்பட்டு, அவரது உடல் கள்ளக்குறிச்சி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

மாணவி ஸ்ரீமதி பள்ளியில் உள்ள விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இருப்பினும் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது தாய் செல்வி மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், பெரிய நெசலூரைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று வேப்பூர் கூட்டு ரோட்டில் இருந்து ஊர்வலமாக சென்று வேப்பூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தகவல் அறிந்த விருத்தாசலம் சப்-கலெக்டர் பழனி நேரில் சென்று பாதிக்கபட்ட பெண்ணின் தாய் செல்வியிடம் நேரில் விசாரணை நடத்தினார். அப்போது செல்வி, பள்ளியின் தாளாளர் உள்பட தனது மகள் சாவுக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும், இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்திட வேண்டும், மேலும் இதை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும், அப்போது தான் மாணவியின் உடலை பெற்று செல்வோம் என்று கூறினர். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று சப்-கலெக்டர் பழனி தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்