திருவாரூர் தியாகராஜர் கோவில் தெப்ப திருவிழா 3 நாட்கள் நடக்கிறது

திருவாரூர் தியாகராஜர் கோவில் தெப்ப திருவிழா வருகிற 25-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

Update: 2023-05-18 18:45 GMT

திருவாரூர் தியாகராஜர் கோவில் தெப்ப திருவிழா வருகிற 25-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

தியாகராஜர் கோவில்

திருவாரூரில் தியாகராஜர் கோவில் உள்ளது. சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்கும் இக்கோவிலில் மூலவராக புற்றிடம் கொண்டார் அருள்பாலித்து வருகிறார். உற்சவராக தியாகராஜர் அருள்பாலித்து வருகிறார். கமலாம்பிகை தனிச்சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.

சைவ மரபில் பெரிய கோவில் எனவும் திருமூலட்டானம் எனவும் பூங்கோவில் எனவும் இக்கோவிலை அழைக்கிறார்கள். சைவத்திற்கு கோவில் தில்லை என்றால் இறைவன் உறையும் மூலஸ்தானம் திருவாரூர் ஆகும்.

ஆழித்தேரோட்டம்

இக்கோவில் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும் உள்ளது. உலகிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும். அதேபோல கோவிலுக்கு அருகே உள்ள கமலாலய குளம் புண்ணிய தீர்த்தங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. கமலாலயக்குளம் மகாலட்சுமி தவம் புரியும் இடமாக கருதப்படுகிறது.

இந்த குளமே ஆலயமாக போற்றப்படுகிறது. இதை உணர்த்தும் விதமாக தியாகராஜர் கோவில் பரப்பளவான 33 ஏக்கர் பரப்பளவில் கமலாலயக்குளமும் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும்.

தெப்ப திருவிழா

தியாகராஜர் கோவிலில் உலகப்பிரசித்திப்பெற்ற ஆழித்தேரோட்டம் கடந்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி நடந்தது. ஆழித்தேரோட்டத்தை தொடர்ந்து கமலாலயம் குளத்தில் தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி தியாகராஜர் ேகாவில் கமலாலய குளத்தில் தெப்ப திருவிழா வருகிற 25-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்கி 27-ந்தேதி (சனிக்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது. இந்த 3 நாட்களும் இரவு 8 மணிக்கு தொடங்கி விடிய, விடிய குளத்தை தெப்பம் வலம் வரும். இதனை பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெப்பம் கட்டும் பணி

தெப்ப திருவிழாவை முன்னிட்டு கமலாலய குளத்தில் தெப்பம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தெப்பத்தின் நீள அகலம் 50 அடியும், உயரம் சுமார் 18 அடியும் உடையதாகும். 800 பேர் அமரும் வகையில் இந்த தெப்பம் வடிவமைக்கப்படுகிறது.

குளக்கரையில் காலி பேரல்கள் அடுக்கி வைக்கப்பட்டு, அதில் காற்று நிரப்பி முதலில் நன்றாக சோதனை செய்யப்படும். பின்னர் மரப்பலகையுடன் காற்று நிரப்பிய பேரல்களை கட்டி அவற்றை குளத்தில் மிதக்க விட்டு, அதன் மீது பிரமாண்டமான தெப்பம் கட்டப்பட உள்ளது.

இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணியில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தெப்பம் கட்டுமான பணிகள் ஓரிரு நாட்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்