ராமேசுவரத்தில் பயங்கரம்: பெண்ணை தூக்கிச்சென்று பலாத்காரம் செய்து கொலை

ராமேசுவரம் கடற்கரையில் தனியாக நடந்து வந்த பெண்ணை புதருக்குள் தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற வடமாநில வாலிபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2022-05-26 02:33 IST

ராமேசுவரம்,

ராமேசுவரம் வடகாடு பகுதியை சேர்ந்த மீனவரின் மனைவியான 45 வயது பெண்ணுக்கு, 3 மகள்கள் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. மற்றொரு மகள் பிளஸ்-2 படித்து வருகிறார்.

இந்தநிலையில் அந்த மீனவ பெண் நேற்று முன்தினம் கடலில் பாசி சேகரிப்பதற்காக சென்றார். மாலை வரையிலும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.

புதருக்குள் பிணம்

அதைத்தொடர்ந்து வடகாடு கடற்கரை பகுதியில் அவரை தீவிரமாக தேடினர். கடற்கரையையொட்டிய காட்டு கருவேலமர புதருக்குள் அந்த பெண், ஆடைகள் கலைந்த நிலையில் பிணமாக கிடந்ததை அறிந்து, உடலை மீட்டனர்.

இந்த கொலை தொடர்பாக வடகாடு பகுதியில் உள்ள இறால் பண்ணையில் வேலை பார்த்து வரும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அங்கு சென்று விசாரித்தனர். ஆனால் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

கூட்டு பலாத்காரம் செய்து கொலை

இதனால் போலீசாருடன் சென்ற மக்கள் ஆத்திரத்தில் வடமாநில வாலிபர்கள் 6 பேரை சரமாரியாக தாக்கினர். மேலும் இறால் பண்ணை முன்பகுதியில் இருந்த பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் விசாரணையில் அந்த 6 பேரும், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ்(வயது 22), விகாஸ்(24), ராகேஷ்(25) பிரசாத்(19), ரஞ்சன் ராணா(34), பிண்டு(19) என தெரியவந்தது.

அவர்களை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது, கடல்பாசி சேகரித்து விட்டு தனியாக வந்த அந்த பெண்ணை, இந்த 6 பேரும் வழிமறித்து அவரை புதருக்குள் தூக்கிச்சென்று கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை கொன்றுவிட்டு, பிணத்தை முட்புதரில் தூக்கிப்போட்டுவிட்டு அந்த வாலிபர்கள் 6 பேரும், தாங்கள் பணிபுரிந்த இறால் பண்ணைக்கு சென்றுள்ளனர்.

சாலைமறியல்

இந்தநிலையில் நேற்று காலை ராமேசுவரம் வடகாடு கிராம மக்கள் மற்றும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்கள் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். ஏராளமானோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கலெக்டர் நேரில் வந்து பேசினால் மட்டும்தான் போராட்டத்தை கைவிடுவோம் என கூறிவிட்டனர். அப்போது ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராமலிங்கம் அங்கு வந்தார். ஆனால் அவரை போராட்டம் நடந்த பகுதிக்கு வரவிடாமல் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கலெக்டர் வந்தால் மட்டும்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என கோஷமிட்டனர். அதன் பின்னர் தாலுகா அலுவலகத்தில் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

அப்போது இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி இல்லாமல் செயல்படும் இறால் பண்ணைகள் மூடப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

டயர்கள் எரிப்பு

இதையடுத்து போராட்டத்தை கைவிடுவதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் தெரிவித்தனர். ஆனால் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த சிலர், கலெக்டர் வராமல் போராட்டத்தை கைவிட மாட்டோம் என கூறி சாலையில் பழைய வாகனங்களின் டயர்களை தீ வைத்து எரித்தனர்.

இதைதொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தலைமையில் அதிரடிப்படை போலீசார் போராட்ட பகுதிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர். இதையடுத்து அங்கு போக்குவரத்து சீரானது. இருப்பினும் மறியல் காரணமாக காலை 8 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ராமேசுவரம் வந்த அனைத்து சுற்றுலா வாகனங்களும் நகராட்சி சுங்கச்சாவடி பகுதியில் இருந்து மண்டபம் வரையிலும் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.

Tags:    

மேலும் செய்திகள்