முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம்

ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கம் தீர்ப்பையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் புதுக்கோட்டையில் வருகிற 5-ந் தேதி நடைபெற உள்ளது.;

Update:2023-05-25 00:09 IST

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

தமிழர்களின் வீர விளையாட்டானது ஜல்லிக்கட்டு. இதில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக பீட்டா உள்பட விலங்குகள் நல அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து கடந்த 2017-ம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள், இளம்பெண்கள் உள்பட பொதுமக்கள் அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் விரிவடைந்து நடைபெற்றது. இதன் காரணமாக விலங்குவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து அவசர சட்டம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த அவசர சட்டத்திற்கு தடை கோரி பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்பும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இதிலும் அரசின் சட்டத்திருத்தம் செல்லும், ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என 5 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்பு வரலாற்று மிக்க தீர்ப்பாக அமைந்தது. அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம்

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் கிடைத்த தீர்ப்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான தமிழக அரசின் சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு தரப்பில் இருந்து வக்கீல்கள் சரியான வாதங்களை முன்வைத்ததால் 5 நீதிபதிகளும் ஒட்டுமொத்தமாக ஒரே தீர்ப்பை வழங்கியிருக்கின்றனர் என்றனர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டை மீட்டெடுத்ததற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் வருகிற 5-ந் தேதி புதுக்கோட்டையில் நடத்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் முடிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி அருகே புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் இடையப்பட்டிக்கும், சிவப்பட்டிக்கும் இடையில் உள்ள ஸ்ரீ பாலா நகரில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

பூமி பூஜை

இந்த பொதுக்கூட்டம் நடைபெற உள்ள திடலில் பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பூஜையை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லபாண்டியன், டாக்டர் முத்துராஜா எம்.எல்.ஏ. உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்