தர்மபுரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சட்டசபை பொது கணக்கு குழுவினர் நேரில் ஆய்வு
தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தமிழ்நாடு சட்டசபை பொது கணக்கு குழுவினர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்கள். அப்போது பள்ளி மாணவர் விடுதிகளின் பராமரிப்பை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டது.;
தரமான உணவு
தமிழ்நாடு சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில் குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் ஈஸ்வரன், சேகர், பாலாஜி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, உதயசூரியன், தர்மபுரி எம்.எல்.ஏ. எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தமிழ்நாடு சட்டசபை சார்பு செயலாளர் பால சீனிவாசன் ஆகியோர் தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்கள். இந்த ஆய்வின்போது கலெக்டர் சாந்தி முன்னிலை வகித்தார். துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வில் பங்கேற்றனர்.
இந்த ஆய்வின் போது பூமாண்ட அள்ளி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள வகுப்பறைகள், ஆய்வகங்கள், ஆகியவற்றை பார்வையிட்டனர். அப்போது மாணவர் விடுதியில் வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தனர். உணவை தரமாகவும், சுகாதாரமாகவும் சமைத்து வழங்க வேண்டும் என்று அப்போது சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
கட்டுமான பணி
இதைத்தொடர்ந்து காரிமங்கலம் பஸ் நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள், பேரூராட்சி பகுதியில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி, புதிய உழவர் சந்தையில் உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டு பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து தர்மபுரி சந்தைப்பேட்டையில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நூலகம்மற்றும் அறிவுசார் மைய கட்டுமான பணி, தர்மபுரி உழவர் சந்தை அருகே மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய நிர்வாக அலுவலக கட்டுமான பணி ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.
இந்த பணிகளை தரமாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோரும் பங்கேற்றனர்.
பரிந்துரைகள்
இந்த கூட்ட முடிவில் சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினோம். அதன் அடிப்படையில் பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அந்தந்த துறைகளின் செயலர்களை வரவழைத்து சென்னையில் ஆலோசனை வழங்க இருக்கிறோம். ஆய்வுக்கூட்டத்தில் பல்வேறு துறைகள் சார்ந்த கோரிக்கைகள் தொடர்பாக அதிக மனுக்கள் வந்துள்ளன. பள்ளிக்கல்வித்துறையில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளின் பராமரிப்பை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.