நிலச்சரிவில் சிக்கி உயிர் இழந்த ராணுவ வீரர் உடல் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம்

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிர் இழந்த ராணுவ வீரர் உடல் கிருஷ்ணகிரியில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.

Update: 2022-05-28 15:28 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே உள்ள சூலமலை ஊராட்சிக்கு உட்பட்ட மேல் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 53). இந்திய ராணுவத்தில் எல்லை பாதுகாப்பு படைப் பிரிவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி தேதி சிக்கிம் மாநிலம் மனநூல் மாவட்டம் பிரிட்ஜ் பாயின்ட் என்னுமிடத்தில் ராமன் சுரங்க பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார் அப்போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.

அவரது உடல் முழு ராணுவ மரியாதையுடன் இன்று கிருஷ்ணகிரி அருகேயுள்ள அவரது சொந்த ஊரான மேல்கொட்டாய் கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில் ராணுவ வீரர் உடலுக்கு பர்கூர் தாசில்தார் பிரதாப் மற்றும் கந்திகுப்பம் போலீசார் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் 10 போலீசார் இணைந்து தேசிய கீதம் இசைத்து 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இதையடுத்து வீரமரணமடைந்த ராமனின் உடலுக்கு உறவினர்கள் கிராம மக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து ராமனின் உடல் தகனம் செய்யப்பட்டது. வீரமரணமடைந்த ராமனுக்கு மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்