இருளர் இன மக்களுக்கு உடனடியாக இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கிய கலெக்டர்

இருளர் இன மக்களுக்கு உடனடியாக இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் வழங்கினார்.

Update: 2023-06-16 18:44 GMT

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் கற்பகம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குரும்பலூரில் உள்ள அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்ட கலெக்டர் அந்த கட்டிடம் சற்று பழுதடைந்த நிலையில் இருப்பதை கண்டு, உடனடியாக கட்டிடத்தில் ஆங்காங்கே உள்ள குறைபாடுகளை சரி செய்ய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் குரும்பலூரில் விளிம்பு நிலையில் உள்ள இருளர் இன மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கலெக்டரிடம் முன் வைத்தனர்.

இதையடுத்து கலெக்டர் உத்தரவின்படி, தயாராக இருந்த 20 நபர்களுக்கான இலவச வீட்டுமனை பட்டாவிற்கான இ-பட்டாக்கள் கொண்டு வரப்பட்டு உரியவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனை சற்றும் எதிர்பார்க்காத இருளர் இன மக்கள் மனம் நெகிழ்ந்து கண்ணீர் மல்க கலெக்டருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் அங்குள்ள குடியிருப்புகளில் முதல்-அமைச்சரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளில் பல வீடுகள் இன்னும் முழுமை பெறாமல் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து வீடுகள் கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு வழங்கப்படும் பணத்தை முறையாக பெற்று, அவர்களுக்கான வீட்டை முழுமையாக கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.

அப்பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள், கழிவறைகளை முறையாக சுத்தம் செய்ய பேரூராட்சி செயல் அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது குரும்பலூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவழகன், ஸ்டாலின் செல்வகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் மெர்சி, பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்