சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை இடிக்க வேண்டும்

சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை இடிக்க வேண்டும்;

Update:2023-04-20 00:15 IST

ஜாம்புவானோடை வடகாடு பகுதியில் சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடு்த்துள்ளனர்.

அரசு உயர்நிலைப்பள்ளி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுகா ஜாம்புவானோடை வடகாடு பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 1983-ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடம் மிகவும் சேதமடைந்துள்ளது. மேலும் கட்டிடத்தின் மேற்கூரையின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து எந்தநேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. சேதமடைந்துள்ள கட்டிடத்தால் மாணவர்களுக்கு அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உயிர்பலி ஏற்படும் முன்பு சேதமடைந்துள்ள கட்டிடத்தை இடிக்க வேண்டும் என பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் இதுவரை கட்டிடம் இடிக்கப்படாமல் உள்ளது.

புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்

தற்போது சேதமடைந்துள்ள கட்டிடத்தில் தான் மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இதனால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து இந்த கட்டிடத்தை இடித்து விட்டு அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள், பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடமும், பள்ளிக்கு போதிய ஆசிரியர், தலைமை ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தகர கொட்டகையில் சமையல் அறை

இந்த பள்ளியில் சமையல் அறைக்கு கட்டிடம் இல்லாததால், தகர கொட்டகையில் சமையல் அறை இயங்கி வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தகர கொட்டகையில் இயங்கும் சமையல் அறைக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்