சிங்கோனா டேன்டீயை மூடும் முடிவை கைவிட வேண்டும்: தெளிவான தகவலை அறிவிக்கக்கோரி தொழிலாளர்கள் போராட்டம் நடத்த முடிவு-கொட்டும் மழையில் ஆலோசனையில் ஈடுபட்டனர்

சிங்கோனா டேன்டீயை மூடும் முடிவை கைவிட வேண்டும் என்றும், தெளிவான தகவலை அறிவிக்கக்கோரியும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். மேலும் கொட்டும் மழையில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.;

Update:2022-10-11 00:15 IST

வால்பாறை

சிங்கோனா டேன்டீயை மூடும் முடிவை கைவிட வேண்டும் என்றும், தெளிவான தகவலை அறிவிக்கக்கோரியும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். மேலும் கொட்டும் மழையில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

நஷ்டத்தில் டேன்டீ

வால்பாறை அருகே சிங்கோனா பகுதியில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட வளர்ச்சி கழகம் (டேன்டீ) உள்ளது. இந்த நிர்வாகம் 1991-ம் ஆண்டு 1,200 ஹெக்டர் பரப்பளவில் தொடங்கப்பட்டது. அப்பகுதி யானைகள் வழித்தடங்களில் அமைந்துள்ள வனப்பகுதி சூழ்ந்த இடமாக இருந்ததாலும், தொழிலாளர்கள் பாதுகாப்பு கருதியும் சில பகுதிகள் வனத்துறைக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டது. தற்போது 720 ஹெக்டர் பரப்பளவு பயன்பாட்டில் உள்ளது.

ஆரம்பத்தில் 1,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், தற்போது 500 பேர் பணிபுரிந்து வருகின்றனர். டேன்டீ தொடங்கிய நாளில் இருந்து நஷ்டத்தில் இயங்கி வருவதாக நிர்வாகம் தரப்பில் தொழிலாளர்களுக்கு கூறப்பட்டு வந்தது. இந்தநிலையில் டேன்டீ நிர்வாகம், கடந்த மாதம் 20-ந் தேதி 50 வயதை கடந்த தொழிலாளர்களிடம் விருப்ப ஓய்வில் செல்ல விருப்பமா, 50 வயதிற்கு கீழ் இருப்பவர்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள டேன்டீ நிர்வாகத்தின் எஸ்டேட் பகுதியில் வேலை வழங்கப்பட்டு உள்ளதாக வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு டேன்டீ நிர்வாக இயக்குனர் சிங்கோனா பகுதிக்கு வந்து கோட்ட மேலாளர் மற்றும் தோட்ட அதிகாரிகளை சந்தித்து விட்டு சென்றார்.

போராட்டம் நடத்த முடிவு

இதனை தொடர்ந்து டேன்டீ தொழிலாளர்களிடம் கோட்ட மேலாளர் மற்றும் தோட்ட அதிகாரிகள் டேன்டீ நிர்வாகம் மூடப்படுவது உறுதியென்றும், அதற்கான அரசாணை நேற்று வர விருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர். இதனால் சிங்கோனா டேன்டீ தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கலக்கத்தில் இருந்தனர். ஆனால் நேற்று அரசாணை வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று பணி முடிந்து கொட்டும் மழையில் குடைகளை பிடித்துக் கொண்டு தொழிலாளர்கள் கோட்ட அலுவலகம் மற்றும் தோட்ட அலுவலகத்தின் முன் கூடிநின்று டேன்டீ நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்துவது என்றும், கட்டாயம் டேன்டீயை மூடிவிட்டு வெளியேற்றப்பட்டால் ஒரு தொழிலாளிக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.

ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பலன்களை முழுமையாக தரவேண்டும். எங்களின் வாழ்வாதாரத்திற்கு தமிழக அரசு தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும், அதிகப்படியான பச்சை தேயிலை கிடைத்து வரும் நிலையில் நிர்வாகம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக நிர்வாகம் கூறுவதையும் கண்டித்து தொடர்ந்து போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்து கலைந்து சென்றனர். இதனால் சிங்கோனா டேன்டீ பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் சிங்கோனா பகுதியில் மட்டுமல்லாமல் வால்பாறை நகர் பகுதியிலும், தாசில்தார் அலுவலகம் முன்பும் போராட்டங்களை நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்