தற்கொலைக்கு முயன்ற தவெக பெண் நிர்வாகி மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்
தவெக பெண் நிர்வாகி விஜய்யின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.;
தூத்துக்குடி,
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் அஜிதா ஆக்னல். தமிழக வெற்றிக்கழக பெண் நிர்வாகியான இவருக்கு சமீபத்தில் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படாததால் தனது ஆதரவாளர்களுடன் சென்னைக்கு சென்று நடிகர் விஜய்யின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை த.வெ.க. மாநில நிர்வாகிகள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
பின்னர் தூத்துக்குடிக்கு அஜிதா ஆக்னல் திரும்பி வந்தார். இதற்கிடையே அவரைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் பரவியதால் மனமுடைந்த நிலையில் இருந்தார். கடந்த 25-ந்தேதி அஜிதா ஆக்னல் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
உடனடியாக அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அஜிதா ஆக்னல் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை ஏராளமானவர்கள் சந்தித்து நலம் விசாரித்து சென்றனர்.
இந்த நிலையில், அஜிதா ஆக்னலுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை அவசர சிகிச்சை வார்டுக்கு இடமாற்றம் செய்தனர். அங்கு அவருக்கு டாக்டர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.