லாரியில் இருந்து குதிக்க முயன்ற டிரைவர் மின்சாரம் பாய்ந்து பலி

லாரியில் இருந்து குதிக்க முயன்ற டிரைவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

Update: 2022-06-17 19:14 GMT

குன்னம்:

லாரி டிரைவர்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சித்தளி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கவாசகம். இவர் லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். மாணிக்கவாசகத்திடம் அதே ஊரைச் சேர்ந்த அண்ணாமலையின் மகன் ஆனந்தராஜ்(வயது 34) லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, கற்பகம்(30) என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில் ஆனந்தராஜ் சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து லாரியில் செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஒதியம் கிராமத்தில் உள்ள சுப்பிரமணி என்பவரது வீட்டிற்கு நேற்று அதிகாலை வந்தார். ஒதியம் கிராமத்தில் வடக்கு தெருவில் சென்றபோது ஆக்கிரமிப்புகளால் மேற்கொண்டு லாரி செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து செங்கல் லோடு இறக்குவதற்கு மாற்று வழியில் செல்லவும், வழியை காண்பிப்பதற்காகவும் சுப்பிரமணி அந்த லாரியில் ஏறிக்கொண்டார்.

மின்கம்பிகள் உரசின

இதையடுத்து பாப்பாத்தி அம்மன் கோவில் வழியாக சென்று, பின்னர் மேற்கு தெருவில் லாரி சென்றது. அந்த லாரியில் டிரைவர் அருகே சுமை தூக்கும் தொழிலாளிகளான ஈச்சம்பட்டியை சேர்ந்த புஷ்பராஜ் (60), குப்புசாமி(55), சுப்பிரமணியன் ஆகியோர் அமர்ந்திருந்தனர். சுப்பிரமணியின் வீட்டுக்கு அருகில் சென்றபோது அதிகாலை நேரம் என்பதால் லாரியின் முன்னால் சாலையின் குறுக்கே தாழ்வாக சென்ற மின்கம்பிகள் தெரியாதநிலையில், லாரியை தொடர்ந்து ஆனந்தராஜ் இயக்கியதால் லாரியின் இரும்பு பெயர்ப்பலகையில் மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி தீப்பொறி ஏற்பட்டது. மேலும் லாரியின் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இதையறிந்த புஷ்பராஜ் பதற்றத்தில் லாரியின் கதவை திறந்து இறங்க முயன்றபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதை பார்த்த சுப்பிரமணி, அவரை எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்டு, தானும் கீழே குதித்தார். ஆனால் டிரைவர் ஆனந்தராஜ் இரும்பு கதவை திறந்து குதிக்க முயன்றபோது மின்சாரம் பாய்ந்து சுருண்டு கீழே விழுந்தார்.

சாவு

இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் ஆனந்தராஜின் நெஞ்சுப்பகுதியில் பலமாக அழுத்தியும், வாய் வழியாக சுவாச காற்று கொடுத்தும் முதலுதவி அளித்தனர். இதையடுத்து அவருக்கு சுயநினைவு திரும்பியுள்ளது. ஆனால் சில விநாடிகளில் ஆனந்தராஜ் மீண்டும் சுயநினைவை இழந்துள்ளார். மேலும் முதலுதவி சிகிச்சை அளிக்க முற்பட்டநிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அங்கு வந்த ஆனந்தராஜின் மனைவி கற்பகம் மற்றும் அவரது உறவினர்கள் ஆனந்தராஜின் உடலை பார்த்து கதறி அழுதது, அதைக்கண்டவர்களின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.

இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆனந்தராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஆனந்தராஜின் மனைவி கற்பகம் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்