மின்கட்டண உயர்வால் தொழில்துறை மேலும் பாதிக்கும்
தொழில்துறையை மேலும் பாதிக்கும் மின்கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யா விட்டால் போராட்டம் நடத்த தொழில் அமைப்புகளின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.;
கோவை
தொழில்துறையை மேலும் பாதிக்கும் மின்கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யா விட்டால் போராட்டம் நடத்த தொழில் அமைப்புகளின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தொழில் அமைப்புகள் ஆலோசனை
தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்வது தொடர்பாக கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி அரங்கில் வருகிற 16-ந் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தநிலையில் மின் கட்டண உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சிறு, குறு தொழில் அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் கொடிசியாவில் நடைபெற்றது.
இதில், கொடிசியா தலைவர் திருஞானம் பேசியதாவது:-
மின்கட்டண உயர்வு அறிவிப்பு தொழில்நிறுவனங்களை மேலும் பாதிப்படைய செய்யும். தாழ்வழுத்த மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.6.35-ல் இருந்து 7.50 ஆக உயர்த்தப்படுகிறது. உயரழுத்த மின்கட்டணம் ரூ.6.35-ல் இருந்து ரூ.6.75 ஆக உயர்த்த சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
கவலை அளிக்கிறது
மாதந்தோறும் தாழ்வழுத்த நிலை கட்டணமாக (பிக்சட் சார்ஜ்) கிலோவாட்டுக்கு ரூ.35 ஆக இருப்பது 3 வகையாக பிரிக்கப்பட்டு உயர்த்தப்பட்டுள்ளது கவலை அளிப்பதாக உள்ளது.முதல் 50 கிலோவாட் வரை ரூ.100 ஆகவும், 50 முதல் 100 கிலோ வாட் வரை ரூ.335 ஆகவும், 100 கிலோவாட்டிற்கு மேல் ரூ.600 ஆகவும் 20 மடங்கு உயர்ந்தால் தொழில்நிறுவனங்களை பாதிக்கும்.
உயர் மின்னழுத்தத்தை பொறுத்தவரை ஒரு கிலோவாட்டிற்கு ரூ.350-ல் இருந்து ரூ.600 உயர்த்தப்பட்டுள்ளது.
மறுபரிசீலனை
இந்த கட்டண உயர்வை கைவிட்டு ஒரேபடி நிலை கட்டணமாக மாற்றி அமைக்க வேண்டும். அனைத்து தொழிற்சாலைகளுக்கும் பீக் அவர் கட்டணம் 25 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் தொழிற்சாலைகளுக்கு கூடுதல் செலவு ஏற்படும்.
இதன் காரணமாக தொழில் நிறுவனங்களை நடத்துவதில் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே மின்கட்டண உயர்வை அரசு மறுபரிசீ லனை செய்ய வேண்டும். மின்கட்டணம் அதிகமானால் உற்பத்தி செலவு அதிகரிக்கும். தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலை உயரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் இந்திய தொழில் வர்த்தகசபை தலைவர் பாலசுப்பிரமணியம், டேக்ட் அமைப்பு தலைவர் ஜேம்ஸ், சீமா தலைவர் விக்னேஷ், காட்மா தலைவர் சிவக்குமார், சிறு, குறு தொழில் அமைப்பை சேர்ந்த ரங்கராஜன், டேன்ஸ்டியா அமைப்பை சேர்ந்த சுருளிவேல், டேப்மா தலைவர் கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சரை சந்திக்க முடிவு
இது குறித்து தொழில் அமைப்பினர் கூறும்போது, தற்போது தொழில் துறை நசிவை சந்தித்து வருகிறது. எனவே மேலும் பாதிப் பை ஏற்படுத்தும் மின்கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வற்புறுத்தி கோவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து முறையிடுவது என்றும், அதன்பிறகும் மறுபரிசீலனை செய்யாவிட்டால் போராட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.