எந்த பாசிச சக்திகளாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்
ஜனநாயகத்தில் வலிமை மிக்க சக்திகள் ஒன்று சேர்ந்து இருக்கும் போது எந்த பாசிச சக்திகளாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது என கிறிஸ்துமஸ் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.;
சென்னை,
சென்னை, பெரம்பூர், டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் தி.மு.க. சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில் நடைபெற்ற, “கிறிஸ்துமஸ் பெருவிழா”-வில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கிறிஸ்துமஸ் என்பது எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய நாள்! அன்பை பரிமாறிக்கொள்ளும் நாள். அப்படிப்பட்ட இந்த திருநாள் கொண்டாட்டத்தில் 3 ஆயிரத்து 250 குடும்பங்களுக்கு, நலத்திட்ட உதவிகளை வழங்கியிருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. சிறுபான்மை மக்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும். உங்களின் வாழ்க்கையில் ஒளி நிலைபெற வேண்டும் என்று பார்த்துப் பார்த்து திட்டங்களை செய்துகொண்டு இருக்கிறோம்.
திருநெல்வேலியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் 4 அறிவிப்புகளை வெளியிட்டேன். அதே போன்று இந்த மேடையில் இனிகோ வைத்த கோரிக்கைக்கான அறிவிப்பை இப்போதே வெளியிட நான் விரும்புகிறேன். அதாவது, 2019 முதல் 2024 வரை செயல்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிமுறைகள் 2019-இன் படி உள்ள மதச்சார்பான கட்டிடங்களுக்கு மாவட்ட கலெக்டரின் தடையில்லா சான்றை வலியுறுத்தாமல் திட்ட அனுமதி வழங்கப்படும். இந்த காலத்தில் திட்ட அனுமதி வேண்டி விண்ணப்பித்திருக்கும் மதச்சார்பான கட்டிடங்களுக்கும் இது பொருந்தும்.
நாட்டில், அன்புவழி நடக்கும் சமத்துவத்தை விரும்பும் சக மனிதர்களை சகோதர - சகோதரிகளாக நினைக்கும் மக்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறோம். ஜனநாயகத்தில் இந்த வலிமைமிக்க சக்திகள் ஒன்று சேர்ந்து, மக்களும் ஆதரவாக இருக்கும்போது, எந்த பாசிச சக்திகளாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது. உங்களுக்குத் துணையாக தி.மு.க.வும் - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியும் உறுதியாக இருக்கும். அதேபோல், என்றைக்கும் நீங்கள் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டு, மீண்டும் உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளையும், புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்து, விடைபெறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.