ஆற்று பாலம் உடைந்தது; வெள்ளத்தில் சிக்கியவர் மீட்பு

கூடலூரில் கனமழையால் ஆற்று பாலம் உடைந்து விழுந்தது. வெள்ளத்தில் சிக்கிய தொழிலாளியை மீட்டனர்.

Update: 2022-07-13 14:59 GMT

கூடலூர், 

கூடலூரில் கனமழையல் ஆற்று பாலம் உடைந்து விழுந்தது. வெள்ளத்தில் சிக்கிய தொழிலாளியை மீட்டனர்.

பாலம் உடைந்தது

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், கால்வாய்களில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கூடலூரில் நேற்று முன்தினம் விடிய விடிய கனமழை கொட்டியது. இதனால் குடியிருப்புகள், சாலைகளில் வெள்ளம் தேங்கியது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நேற்று காலை 9 மணியளவில் கூடலூர் மங்குலி பகுதியில் ஓடும் ஆற்றின் குறுக்கே இருந்த பழைய சிமெண்ட் பாலம் திடீரென உடைந்து விழுந்தது. அப்போது பாலத்தில் நின்று கொண்டு தண்ணீர் வருவதை பார்த்துக் கொண்டிருந்த பலர் அங்கிருந்து தப்பி ஓடினர். ஆனால், துரதிஷ்டவசமாக மாணிக்கம் என்ற தொழிலாளி உடைந்த பாலத்தில் இருந்து தவறி ஆற்றுக்குள் விழுந்தார்.

தொழிலாளி மீட்பு

அவர் உடைந்த பாலத்தின் ஒரு பகுதியை பிடித்தபடி வெள்ளத்தில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருந்தார். இதை கண்ட அப்பகுதி மக்கள் துணிகளை கயிறு போல் கட்டி ஆற்றுக்குள் வீசினர். பின்னர் அந்த கயிற்றை மாணிக்கம் பிடித்து கொண்டார். தொடர்ந்து பொதுமக்கள் மாணிக்கத்தை ஆற்றுக்குள் இருந்து மீட்டனர். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.

இதுகுறித்த அப்பகுதி மக்கள் கூறும் போது, பல ஆண்டுகளாக மங்குலி ஆற்று பாலம் பழுதடைந்து காணப்படுகிறது என புகார் தெரிவித்தும் புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது தொடர் மழையால் பாலம் உடைந்து விட்டது. இதனால் மங்குலி உள்பட சில கிராம மக்கள் கூடலூருக்கு செல்ல முடியாத வகையில் சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. எனவே, பாலம் கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். ஒரே நாளில் கூடலூரில் 18 சென்டி மீட்டர் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்