தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Update: 2022-05-24 17:02 GMT

வேலூர்

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

வேலை நிறுத்த போராட்டம்

வேலூர் மாநகராட்சியில் பணியாற்றி வரும் பகுஜன் சமாஜ் தூய்மை தொழிலாளர்கள் மற்றும் பொது தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் வருகிற 1-ந் தேதி வரை 10 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

வேலூர் மாநகராட்சி பகுதியில் தெருக்களை சுத்தம் செய்வதும், குப்பைகளை தரம் பிரிப்பதும், வீடுவீடாக சென்று குப்பைகளை சேகரிப்பதும், டெங்கு கொசு ஒழிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

பல ஆண்டுகளாக வேலை செய்து வரும் அவர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

முற்றுகை

எனவே ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இன்றும் அவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குமார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தினக்கூலியில் ரூ.20 கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் ஒப்பந்தத்தை ரத்து செய்து புதிய ஒப்பந்தம் போட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தொழிலாளர்கள் திருப்தி அடையவில்லை. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

போராட்டத்தில் ஈடுபடுவோம்

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், ''குறைந்தபட்ச ஊதிய உயர்வு கேட்டு போராடுகிறோம். மாநகராட்சி செவி சாய்க்கவில்லை. ஊதியம் குறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்கவேண்டும் என்று கூறுகின்றனர்.

ஒப்பந்ததாரர் எங்கு இருக்கிறார்? என்று தெரியவில்லை. பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, எங்களுக்கு பி.எப்.கட்ட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளோம்.

எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம். நாளை  கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க உள்ளோம்'' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்