மாணவி, தூக்கில் பிணமாக தொங்கினார்

வேதாரண்யம் அருகே நர்சிங் கல்லூரியில் தங்கியிருந்த மாணவி, தூக்கில் பிணமாக தொங்கினார். தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் அவரது தந்தை புகார் கொடுத்துள்ளார்.

Update: 2022-10-31 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே நர்சிங் கல்லூரியில் தங்கியிருந்த மாணவி, தூக்கில் பிணமாக தொங்கினார். தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் அவரது தந்தை புகார் கொடுத்துள்ளார்.

நர்சிங் கல்லூரி

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா பெருமழை கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவருடைய மகள் இந்துஜா(வயது 18). இவர், கடினநெல்வயலில் உள்ள நவஜீவன் கமிட்டி நர்சிங் கல்லூரியில் செவிலியர் உதவியாளர் படிப்பு படித்து வந்தார்.

இந்த கல்லூரியில் 14 மாணவிகள் படித்து வந்தனர். அங்கு பணியாற்றும் கன்னியாஸ்திரிகள் கல்லூரி வளாகத்தில் உள்ள அறையில் தங்கியுள்ளனர். இங்கு படிக்கும் 13 மாணவிகள் தங்களது வீடுகளில் இருந்து கல்லூரிக்கு வந்து சென்று வருகிறார்கள். ஏழ்மை நிலை காரணமாக தினமும் வந்து செல்ல வசதி இல்லாததால் கன்னியாஸ்திரிகளுடன் மாணவி இந்துஜா தங்கியிருந்தார்.

தூக்கில் பிணமாக தொங்கினார்

இந்த நிலையில் இந்துஜா நேற்று முன்தினம் மதியம் உணவு அருந்தி விட்டு கழிவறைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அங்கிருந்தவர்கள் சென்று பார்த்தபோது இந்துஜா கழிவறையில் துப்பட்டாவில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இந்துஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சாவில் சந்தேகம் இருப்பதாக புகார்

இதுபற்றி தகவல் அறிந்த இந்துஜாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அப்போது அவர்கள் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் 3 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஆஸ்பத்திரியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

போலீசில் புகார்

தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக வேதாரண்யம் போலீசில் இளையராஜா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்துஜா சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்ததால் அவரது உடல் பிரேத பரிசோதனை 2 டாக்டா்கள் மூலம் செய்யப்பட்டு வீடியோ பதிவு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்