தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வற்புறுத்திய பெற்றோர்: 10-ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு
அரையாண்டு தேர்வை முன்னிட்டு மாணவன் நேற்று விடுமுறை எடுத்து வீட்டில் இருந்து படித்து வந்தார்.;
கோப்புப்படம்
கடலூர் அருகே உள்ள அரிசிபெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் பரசுராமன் மகன் ஹரிபிரசாத் (15 வயது). இவர் கடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் நடந்த அனைத்து தேர்விலும் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்று வந்த ஹரிபிரசாத், இன்று (புதன்கிழமை) அரையாண்டு தேர்வு நடைபெற இருந்ததால் நேற்று விடுமுறை எடுத்து வீட்டில் இருந்து படித்து வந்தார். அப்போது மாணவனிடம் அவரது பெற்றோர், தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ஹரிபிரசாத் வீட்டின் சமையல் அறையில் தூக்குப்போட்டுக் கொண்டார். இதை பார்த்து பதறிய பெற்றோர் மற்றும் உறவினர்கள், உடனடியாக மாணவனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே ஹரிபிரசாத் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.