விஜய் தலைமையில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

கட்சி நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய், நாளை அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.;

Update:2025-12-10 08:29 IST

சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. தீவிரமாக தயாராகி வருகிறது. கரூரில் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் மக்கள் சந்திப்பை விஜய் தொடங்கவில்லை. கடந்த மாதம் காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி வளாக உள்அரங்கத்தில் விஜய் மக்கள் சந்திப்பில் பங்கேற்று பேசினார். கரூர் சம்பவத்தை அடுத்து 72 நாட்களுக்குப் பின் பொதுவெளியில் புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் த.வெ.க. பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.

அதில் பேசிய விஜய், “மத்திய அரசுக்குதான் தமிழ்நாடு ஒரு தனி மாநிலம், புதுச்சேரி ஒரு தனி யூனியன் பிரதேசம். நமக்கு அப்படி இல்லை. தமிழ்நாடும், புதுச்சேரியும் தனித்தனியாக இருந்தாலும் நாமெல்லாம் ஒன்றுதான், நாமெல்லாம் சொந்தம்தான். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மட்டுமல்லாமல் உலகின் எந்த மூலையில் நம்ம வகையறாக்கள் இருந்தால் அவர்கள் அனைவரும் நம் உயிர்தான், நம் உறவுதான். 1977-ல் தமிழகத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சி அமைத்தார். ஆனால் அதற்கு முன்பே 1974-ல் புதுச்சேரியில் அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது.

எம்.ஜி.ஆர். நமக்காக அரசியலுக்கு வந்தார். அவரை மிஸ் பண்ணிடாதீர்கள் என ‘அலர்ட்’ செய்தது புதுச்சேரி மண் தான். அப்படிப்பட்ட புதுச்சேரியை நம்மால் மறக்க முடியுமா?. தமிழகத்தைப் போல் புதுச்சேரி மக்களும் என்னை 30 ஆண்டுகளாக தாங்கிப் பிடிக்கிறீர்கள். இந்த விஜய், தமிழ்நாட்டுக்கு மட்டும் தான் குரல் கொடுப்பான் என நினைக்காதீர்கள். அப்படி நினைத்தால் அது தவறானது. புதுச்சேரி மண்ணுக்கும் சேர்த்துதான் குரல் கொடுப்பான். அது என் கடமையும் கூட” என்று பேசி இருந்தார். மேலும் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தும் பேசினார்.

இதனிடையே ஈரோட்டில் த.வெ.க. சார்பில் விஜய் பிரசார கூட்டம் வருகிற 16-ந் தேதி நடைபெற இருந்தது. இந்த நிலையில் பிரசார கூட்டம் 18-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக 19 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பனையூரில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நாளை (11-12-2025) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதன்படி மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகளுடன் நாளை விஜய் அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் பணிகள், சிறப்பு தீவிர திருத்தம், அடுத்த கட்ட மக்கள் சந்திப்பு பயண ஏற்பாடுகள் குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்