கன்னியாகுமரி: சொகுசு விடுதியில் போதை விருந்து - அதிர்ச்சி சம்பவம்
இளைஞர்கள், இளம்பெண்கள் என 80 பேர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டனர்.;
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள மருங்கூரை அடுத்த ராமனாதிச்சன்புதூரில் தனியாருக்கு சொந்தமான சொகுசு விடுதி ஒன்று உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ள இந்த சுற்றுலா விடுதிக்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து தங்கிச் செல்வது வழக்கம். மேலும் தனியார் விருந்து நிகழ்ச்சிகளும் இங்கு நடப்பது வழக்கம்.
இந்நிலையில் குலசேகரம் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரின் மகளின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் தனது நண்பர்கள், உறவினர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தார். இதையடுத்து ஜப்பான், இங்கிலாந்து, போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் கேரளா, கர்நாடகா, கோவா போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் என 80 பேர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டனர்.
நேற்று முன்தினம் இரவு தொடங்கிய இந்த விழாவில் தடை செய்யப்பட்ட கஞ்சா, எம்.டி.எம். என்ற மெத்தபெட்டமைன், போதை மாத்திரைகள் போன்ற உயர் ரக போதை பொருட்கள், வெளிநாட்டு மது வகைகள், சிகரெட் போன்றவற்றை கொண்டு போதை விருந்து நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த போலீசார் சொகுசு விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆண்கள், இளம்பெண்கள், வெளிமாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர். மேலும் அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட உயர்ரக போதை பொருட்கள், வெளிநாட்டு மதுபானங்கள் பயன்படுத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து, போதை விருந்துக்கு வைத்திருந்த 70 மது பாட்டில்கள், 100 கிராம் கஞ்சா, 5 போதை மாத்திரைகள், 2 கிராம் மெத்தபெட்டமைன் ஆகிய போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். போதைப்பொருள் வைத்திருந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், போதைப்பொருள் பயன்படுத்திய வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் உள்பட 70 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.