வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் ரூ.3½ லட்சம் திருட்டு

பெரம்பலூரில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் பிரபல நிறுவனத்தில் ரூ.3½ லட்சம் இருந்த இரும்பு கல்லா பெட்டியை திருடி சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-09-26 18:47 GMT

திருட்டு

பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்து நிறுவனத்தை ஊழியர்கள் பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றனர். நேற்று காலை 9.20 மணிக்கு நிறுவனத்தை திறப்பதற்கு ஊழியர்கள் வந்தனர். அப்போது நிறுவனத்தின் கீழ்புறம் பக்கவாட்டில் உள்ள இரும்பு கதவின் பூட்டும், ஷட்டர் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது நிறுவனத்தில் வியாபாரம் செய்த பணம் வைக்கப்பட்டிருந்த சுமார் 150 கிலோ எடை கொண்ட இரும்பினாலான கல்லா பெட்டி திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ஊழியர்கள் நிறுவனத்தின் மேலாளர் சங்கருக்கு (வயது 48) தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் நிறுவனத்திற்கு விரைந்து வந்தார்.

ரூ.3 லட்சத்து 36 ஆயிரத்து 360

கல்லா பெட்டியில் கடந்த 3 நாட்களாக நிறுவனத்தில் பொருட்கள் விற்பனை செய்தது மூலம் கிடைத்த தொகை ரூ.3 லட்சத்து 36 ஆயிரத்து 360 இருந்தது. சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் வங்கி விடுமுறை என்பதால் நிறுவனத்தில் 3 நாட்கள் வியாபாரம் செய்த மேற்கண்ட தொகை கல்லா பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. இந்த திருட்டு சம்பவம் குறித்து நிறுவனத்தின் மேலாளர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசாரும், குற்றப்பிரிவு போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதற்கிடையே போலீஸ் மோப்ப நாய் பைரவா வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.

2 முகமூடி கொள்ளையர்கள்

மேலும் நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். அதில் நேற்று நள்ளிரவு 12.45 மணியளவில் முகமூடி அணிந்து ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 கொள்ளையர்கள் நிறுவனத்தில் புகுந்து பணம் இருந்த கல்லா பெட்டியை உடைத்தனர். பின்னர் அந்த கல்லா பெட்டியை 2 பேர் கஷ்டப்பட்டு தூக்கியவாறு கடைக்கு வெளியே வந்தனர். பின்னர் அவர்கள் தயார் நிலையில் வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் கல்லா பெட்டியை ஏற்றிக்கொண்டு 2 மணியளவில் மின்னல் வேகத்தில் தப்பி சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது.

அந்த காட்சிகளை வைத்து போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் பதிவெண் திருவண்ணாமலை மாவட்டத்தை சோ்ந்ததாகவும், அந்த மோட்டார் சைக்கிள் ஏற்கனவே மற்றொரு மாவட்டத்தில் திருட்டு சம்பவத்துக்கு பயன்படுத்தியதாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது. இச்சம்பவம் வணிகர்கள், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்