வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு 'ஸ்டிக்கர்' போக்குவரத்து போலீசார் ஒட்டினார்கள்

விபத்து தடுப்பு நடவடிக்கையாக வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கரை போக்குவரத்து போலீசார் ஒட்டினார்கள்.

Update: 2023-07-23 06:07 GMT

சென்னை, 

மோட்டார் சைக்கிள் உள்பட வாகனங்களில் உள்ள முகப்பு விளக்குகள் கண்ணை கூசும் வகையில் பிரகாசிக்கின்றன. இது சில சமயங்களில் சாலை விபத்துகளுக்கு வித்திடுகிறது. எனவே முகப்பு விளக்குகளின் ஒளி பாய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக அதன் மீது கருப்பு 'ஸ்டிக்கர்' ஒட்டும் நடவடிக்கையில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் சந்திப்பு, கீழ்ப்பாக்கம் ஈகா தியேட்டர் சந்திப்பு உள்பட முக்கிய சிக்னல்களில் போக்குவரத்து போலீசார் இந்த விபத்து தடுப்பு விழிப்புணர்வு பிரசாரத்தில் நேற்று ஈடுபட்டனர். கீழ்ப்பாக்கத்தில் போக்குவரத்து உதவி கமிஷனர் கிறிஸ்டோபர் முன்னிலையில் வேப்பேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு மற்றும் போலீசார் வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டினார்கள்.

மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்பவரும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைகவசம் அணிவது கட்டாயம் ஆகும். இதனை ஊக்குவிக்கும் விதமாக மோட்டார் சைக்கிள்களில் 2 பேரும் தலைகவசம் அணிந்து சென்றவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி போக்குவரத்து போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து வார்டன்கள், ஆயுதப்படை போலீசாரும் கலந்துகொண்டு போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்