பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும்பொதுமக்களுக்கு கலெக்டர் பழனி அறிவுரை

மாசில்லா தமிழ்நாடாக மாற்ற பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்கள், மாணவர்களுக்கு கலெக்டர் பழனி அறிவுரை வழங்கினார்.;

Update:2023-08-01 00:15 IST


விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக மைதானத்தில் நேற்று காலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இப்பேரணியை மாவட்ட கலெக்டர் சி.பழனி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி- கல்லூரி மாணவ- மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்று பொதுமக்கள், வணிகர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.இப்பேரணியானது, பெருந்திட்ட வளாகத்தில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நான்குமுனை சந்திப்பில் நிறைவடைந்தது.

முற்றிலும் தவிர்க்க வேண்டும்

முன்னதாக மாவட்ட கலெக்டர் சி.பழனி பேசுகையில், தமிழ்நாட்டை மாசில்லா தமிழ்நாடாக மாற்றவும், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் மண்வளத்தை பாதிக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.அதனடிப்படையில் தற்போது பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

எனவே விழுப்புரம் மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக உருவாக்க பொதுமக்கள், மாணவ- மாணவிகள், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வணிகர்களும், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதை முற்றிலும் தவிர்ப்பதோடு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி, தாசில்தார் வேல்முருகன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வக்குமார், உதவி பொறியாளர்கள் இளையராஜா, பிரபாகரன், ராம்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்