தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி
கோவை அருகே தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்து தொழிலாளி தலையில் கல்லை போட்டு அவரது மனைவி கொலை செய்தார்.;
பெ.நா.பாளையம்
கோவை அருகே தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்து தொழிலாளி தலையில் கல்லை போட்டு அவரது மனைவி கொலை செய்தார்.
இந்த கொலை குறித்து போலீசில் கூறியதாவது:-
குடிபோதையில் தகராறு
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருேக உள்ள நாயக்கனூரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி கலாமணி (55). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. செல்வராஜூம், கலாமணியும் இந்த பகுதியில் தனியாக வசித்து வந்தனர். அவ்வப்போது மகள்கள் வந்து தாய், தந்தையை பார்த்து செல்வார்கள்.
இந்த நிலையில் செல்வராஜூக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். மனைவியும் எவ்வளவோ எடுத்து கூறியும் அவர் கேட்கவில்லை. தொடர்ந்து குடித்து விட்டு தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவும் வழக்கம் போல் செல்வராஜ் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது மனைவியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார்.
கல்லை போட்டு கொலை
வாக்குவாதம் முற்றவே கலாமணி கணவரிடம் கோபித்து கொண்டு வெளியில் சென்று விட்டார். இருப்பினும் தொடர்ந்து செல்வராஜ் வீட்டிற்குள் இருந்தபடி தகாத வார்த்தைகளால் பேசி திட்டி கொண்டிருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கலாமணி, அங்கு வந்து கீழே கிடந்த கல்லை எடுத்து சென்று, செல்வராஜ் தலை மீது போட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். பின்னர் சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. அதில் வந்த மருத்துவ உதவியாளர்கள் செல்வராஜை பரிசோதித்தனர். அப்போது அவர் இறந்து விட்டது தெரியவந்தது.
மனைவி கைது
பின்னர் இன்ஸ்பெக்டர் தாமோதரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து கணவரை கொன்ற கலாமணியை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். குடிபோதையில் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்த கணவரை, மனைவியே தலையில் கல்லை போட்டு கொன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.