தேனி கலெக்டர் அலுவலகத்துக்குஅவரை செடிகளுடன் வந்து மனு கொடுத்த விவசாயிகள்:தரமற்ற விதைகளால் பாதிப்பு என குற்றச்சாட்டு

தரமற்ற விதைகளால் அவரை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக அவரை செடிகளுடன் தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு விவசாயிகள் மனு கொடுக்க வந்தனர்.

Update: 2023-09-04 18:45 GMT

அவரை செடிகளுடன் மனு

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.

கூட்டத்தில் மனு கொடுக்க தேவாரம் அருகே பொட்டிப்புரம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் வந்தனர். அவர்கள் தங்களின் கைகளில் அவரை செடிகளை கொண்டு வந்தனர். கலெக்டரிடம் விவசாயிகள் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், 'எங்கள் கிராம பகுதிகளில் தனியார் நிறுவனத்தின் விதைகளை வாங்கி அவரை விதைப்புக்காக பயன்படுத்தினோம். ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். பூக்கள் பூக்கும் பருவம் வந்தும் பூக்கள் பூக்கவில்லை. செடிகள் மலட்டுத்தன்மையுடனும், மொச்சை வகை செடியாகவும் உள்ளது. தரமற்ற விதைகளால் எங்கள் கிராமத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட விதை நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து, விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடு பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்' என்று கூறியிருந்தனர்.

இலவச வீடுகள்

தேவதானப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், 'தேவதானப்பட்டி மெயின்ரோட்டில் உள்ள வீடுகளை ஆக்கிரமிப்புகள் என்று அகற்றப்போவதாக நெடுஞ்சாலைத்துறையினர் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். எனவே எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கி, இலவச வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்க மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில், தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளர்கள் கொடுத்த மனுவில், 'சொந்த வீடு இல்லாத எங்களுக்கு அரசு இலவச தொகுப்பு வீடோ அல்லது வீடு கட்டுவதற்கு இடமோ வழங்கி வாழ்வாதாரத்துக்கு உதவி செய்யுங்கள்' என்று கூறியிருந்தனர்.

ஆர்ப்பாட்டம்

இதேபோல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் விவசாயிகள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். மஞ்சளாறு அணையின் வலதுகரை புது ஆயக்கட்டு வாய்க்கால் 1-வது மடை முதல் 13-வது மடை வரை பராமரிப்பு செய்யக்கோரியும், இணைப்பு வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரியும் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்