திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவில் தேரோட்டம்
திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.;
சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலையில் பழமையான ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. திருமங்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற இந்த கோவிலில் பெருமாள் நான்கு கோலங்களில் காட்சி அளிக்கிறார்.
சிறப்பு மிக்க இந்த கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 10-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 19-ந் தேதி வரை நடைபெறும் விழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் சாமி வீதி உலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேேராட்டம் நேற்று காலை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் பெருமாள் எழுந்தருள பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோவிலில் இருந்து புறப்பட்ட தேர் நான்கு மாடவீதிகள் வழியாக உலா வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.