நாளை குரூப் 4 - தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் முன்னிட்டு நாளை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-23 10:38 GMT

சென்னை,

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி வெளியிட்டது. இதற்கு விண்ணப்பிக்க கடந்த ஏப்ரல் மாதம் 28-ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. விண்ணப்பப்பதிவு தொடங்கியதில் இருந்தே ஆர்வமுடன் பலர் விண்ணப்பித்தனர்.

அந்த வகையில் 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 ஆண்கள், 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பெண்கள், 131 திருநங்கைகள் என மொத்தம் 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். இவர்களுக்கான தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.

தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் உள்ள 316 தாலுகா மையங்களில் வரும் 7 ஆயிரத்து 689 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக ஒரு மையத்துக்கு ஒரு ஆய்வு அலுவலர் வீதம் 7 ஆயிரத்து 689 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களுக்கு 1 லட்சத்து 10 ஆயிரத்து 150 கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

மேலும் தேர்வில் முறைகேடுகள் நடப்பதை தவிர்க்கும் வகையில் 534 பறக்கும் படையினரும், 7 ஆயிரத்து 689 வீடியோ பதிவாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னையில் மட்டும் 503 தேர்வு மையங்களில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இந்தநிலையில், நாளை குரூப் 4 தேர்வு நடைபெறுவதையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்களை போக்குவரத்துறை இயக்குகிறது. அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் அறிவுறுத்தல் படி, மையங்களின் எண்ணிக்கை ஏற்ப நாளை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தேர்வு மையங்கள் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் சிறப்பு பஸ்கள் முறையாக நின்று செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்