தடையை மீறும் சுற்றுலா பயணிகள்

ஆழியாறு தடுப்பணையில் தடையை மீறி சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.

Update: 2023-04-22 18:45 GMT

ஆழியாறு

ஆழியாறு தடுப்பணையில் தடையை மீறி சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட பகுதி

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை மற்றும் பூங்காவை சுற்றி பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் வால்பாறை போன்ற குளிர்ச்சியான சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆழியாறு அருகே குரங்கு நீர்வீழ்ச்சியானது, தண்ணீர் இல்லாத காரணத்தால் மூடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அணைக்கு எதிரே உள்ள தடுப்பணையில் குளிக்க வருகின்றனர். தடுப்பணையில் சேறு, சகதிகள் மற்றும் சுழல் உள்ளதால் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன. இதை தடுக்க போலீசார், அங்கு குளிக்க தடை விதித்து உள்ளனர். இதை மீறி குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

கண்காணிப்பு இல்லை

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

ஆழியாறு அணைக்கு எதிரே உள்ள தடுப்பணையில் இதுவரை பலர் உயிரிழந்து உள்ளனர். இதை தடுக்க போலீசார் எச்சரிக்கை பலகை வைத்து உள்ளனர். ஆனாலும் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பணையில் உள்ள ஆபத்து தெரியவில்லை. குழந்தைகளையும் தடுப்பணையில் இறக்கி ஆனந்தமாக குளிக்கின்றனர்.

சிலர் ஆழமான பகுதிக்கு செல்வதாலும், சேற்றில் சிக்கியும் இறக்க நேரிடுகிறது. போலீசார் எச்சரிக்கை பலகை வைப்பதோடு சரி, அதன்பிறகு எதையும் கண்டுகொள்வதில்லை. தடுப்பணையில் இருந்து போலீஸ் நிலையம் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. போலீசார் கண்காணிப்பு இல்லாததால் சுற்றுலா பயணிகள் தடுப்பணையில் இறங்கி குளிக்கின்றனர். எனவே போலீசார் தடுப்பணை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு அத்துமீறும் சுற்றுலா பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்