வால்பாறை, ஆழியாறில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோடை விடுமுறையையொட்டி வால்பாறை, ஆழியாறில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் போக்குவரத்து நெரிசலால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்தன.

Update: 2023-04-30 18:45 GMT

வால்பாறை

கோடை விடுமுறையையொட்டி வால்பாறை, ஆழியாறில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் போக்குவரத்து நெரிசலால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்தன.

சுற்றுலா தலங்கள்

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் வால்பாறை, டாப்சிலிப், ஆழியாறு அணை மற்றும் சிறுவர் பூங்கா, குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்களுக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால், சமவெளி பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அவ்வபோது மழை பெய்தாலும், வெப்பம் குறையவில்லை. மேலும் பள்ளிகளுக்கும் கோடை கால விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

இதன் காரணமாக வால்பாறை, டாப்சிலிப், ஆழியாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் ஆழியாறு சோதனை சாவடியில் இருந்து ஆழியாறு பூங்கா வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அங்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் இடத்தில் கூடுதல் ஊழியர்கள் இல்லாததால் ஏற்படும் காலதாமதமும், போக்குவரத்து நெரிசலுக்கு மற்றொரு காரணமாக கூறப்படுகிறது.

இதமான காலநிலை

இதற்கிடையில் சுற்றுலா பயணிகள் வருகையால் வால்பாறையில் கோடை சீசன் களைகட்ட தொடங்கியுள்ளளது. அங்கு அவ்வப்போது லேசான மழையுடன், இதமான காலநிலை நிலவுகிறது. இதை அனுபவித்தபடி கூழாங்கல் ஆறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகிறார்கள்.

இது தவிர கூட்டம் அதிகரிப்பதால் தங்கும் விடுதிகளும் நிரம்பி வழிகின்றன. இதனால் பலரும் தங்குவதற்கு இடம் கிடைக்காமல், தங்களது சுற்றுலா திட்ட நேரத்தை குறைத்துக்கொண்டு திரும்பி செல்லும் நிலை உள்ளது.

வாகனங்களுக்கு 'பெர்மிட்'

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-

குளுகுளு காலநிலை நிலவும் வால்பாறைக்கு சுற்றுலா வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் தங்குவதற்குதான் இடம் கிடைக்கவில்லை. அதற்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் அருகில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்ல வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் வால்பாறையிலேயே வாகனங்களுக்கு பெர்மிட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் சமீபத்தில் திடீரென வெள்ளம் ஏற்பட்டது. அதில் ஒரு குடும்பமே சிக்கியது. எனவே அங்கு போலீஸ்சார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்