போடியில் ஏலக்காய் ஏலத்தை புறக்கணித்த வியாபாரிகள்

போடியில் ஏலக்காய் ஏலத்தை வியாபாரிகள் புறக்கணித்ததால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது

Update: 2023-06-24 21:00 GMT

தேனி மாவட்டத்தில் போடி, கம்பம் உள்ளிட்ட கேரளாவை ஒட்டிய பகுதிகளிலும், கேரளாவில் இடுக்கி மாவட்டத்திலும் ஏலக்காய் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு பறிக்கப்படும் ஏலக்காய்களை விற்பனை செய்வதற்காக போடியில் மத்திய நறுமண பொருட்கள் வாரியம் அமைந்துள்ளது. தேனி, இடுக்கி மாவட்டங்களை சேர்ந்த ஏலக்காய் விவசாயிகள், வியாபாரிகள் தாங்கள் கொள்முதல் செய்ய ஏலக்காய்களை ஏல முறையில் இங்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இதற்கிடையே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு போடி பகுதியில் உள்ள ஏலக்காய் விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தினர். அப்போது ஏலக்காய்களுக்கு செயற்கை நிறத்தை கலந்து விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்ததாக கூறி சுமார் 3 டன் ஏலக்காய்களை விற்பனை செய்யாமல் நிறுத்தி வைத்தனர். மேலும் 5 கடைகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் செயற்கை நிற மூட்டிகள் ஏலக்காயில் சேர்க்கப்பட்டுள்ளது உறுதியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் உணவு பாதுகாப்புத்துறையின் தொடர் சோதனையால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக கூறியும், அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்தும் நேற்று வியாபாரிகள் ஏலக்காய் ஏலத்தை புறக்கணித்தனர். இதனால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஏலக்காய் வியாபாரிகள் ஞானவேல், சங்கர் ஆகியோர் கூறுகையில், விவசாயிகள் சிலர் ஏலக்காய்க்கு கூடுதல் விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக பதப்படுத்துவதற்கும் முன்பு வண்ண சாயத்தை சேர்ப்பதாக கூறப்படுகிறது.

இதனால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைகளில் ஆய்வு செய்து ஏலக்காய்களை பறிமுதல் செய்து வருகின்றனர். ஆனால் கடைகளில் ஆய்வு செய்து, ஏலக்காய்களை பறிமுதல் செய்வது என்பது ஏற்புடையது அல்ல. நறுமண பொருட்கள் வாரியத்துக்கு விற்பனைக்காக வரும் ஏலக்காய்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் சோதனை செய்ய வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்