ராமேசுவரத்தில் தொடரும் போக்குவரத்து நெருக்கடி

ராமேசுவரத்தில் தொடரும் போக்குவரத்து நெருக்கடியால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2022-09-25 16:50 GMT

ராமேசுவரம், 

ராமேசுவரத்தில் தொடரும் போக்குவரத்து நெருக்கடியால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

புண்ணிய தலம்

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வருகின்றனர்.

மிகவும் முக்கிய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் கோவிலுக்கு நாளுக்குநாள் வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்து ் வருகின்றது. அதிலும் குறிப்பாக ஆண்டுதோறும் வரும் ஆடி, தை அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை நாட்களில் சொல்ல முடியாத அளவிற்கு பக்தர்களின் கூட்டம் வருகிறது.

நெருக்கடி

முக்கிய விழா நாட்களில் ராமேசுவரம் பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடி இல்லாமல் வந்து செல்லும் வகையில் இதுவரை சரியான சாலை வசதிகள் இல்லை என்றே சொல்லலாம். இதனால் ராமேசுவரம் நகர் பகுதியில் குறிப்பாக திட்டக்குடி சந்திப்பு சாலையில் இருந்து கோவில் செல்லும் சாலை, தனுஷ்கோடி செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் எந்தநேரமும் போக்குவரத்து நெருக்கடிநிலை நீடிக்கிறது.

ராமேசுவரத்திற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆளுநர்கள், மத்திய மாநில அமைச்சர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரிகள் வந்து செல்கின்ற போதிலும் இதுவரையிலும் ராமேசுவரம் பகுதியில் சுற்றுலா வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடி இல்லாமல் ஒரு வழி பாதையாக வந்து மற்றொரு பாதையாக செல்லும் வகையிலும் இதுவரை எந்த ஏற்பாடும் மேற்கொள்ளப்படவில்லை.

புரட்டாசி மாத மகாளய அமாவாசையான நேற்று ராமேசுவரம் கோவிலுக்கு தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்தனர். இதனால் ராமேசுவரம் பேருந்து நிலையம் முதல் திட்டக்குடி சந்திப்பு சாலை மற்றும் தனுஷ்கோடி செல்லும் சாலையிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து ஊர்ந்தபடியே சென்றன.

கோரிக்கை

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டாவது பல ஆண்டுகளாக ராமேசுவரத்தில் இருந்து வரும் போக்குவரத்து நெருக்கடியை நிரந்தரமாக சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பது அனைவரின் விருப்பம் மற்றும் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்