ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 147 பேருக்கு பயிற்சி ஆணை
ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 147 பேருக்கு பயிற்சி ஆணை;
கூடலூர்
மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் இளைஞர்கள் திறன் திருவிழா கூடலூர் கோழிப் பாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நேற்று பகல் 12 மணிக்கு நடைபெற்றது.
தமிழக வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மையம், தாட்கோ, தமிழ்நாடு ஊரக தொழில் பயிற்சி நிறுவனம் உள்பட பல்வேறு துறைகளும், 15 பயிற்சி நிறுவனங்களும் கலந்து கொண்டன. நிகழ்ச்சியில் 386 இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.
இதில் 147 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு அமைச்சர் கா.ராமச்சந்திரன் பயிற்சி பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் ஜாகிர் உசேன், கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், தாசில்தார் சித்தராஜ், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார், கூடலூர் நகராட்சி தலைவர் பரிமளா, முன்னாள் எம்.எல்.ஏ. திராவிட மணி உள்பட கலந்து கொண்டனர்.