மர்மசாவு வழக்கில் திருப்பம்: இடத்தகராறில் பெண்ணை அடித்துக் கொன்ற தொழிலாளி கைது

தேவர்குளம் அருகே மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பமாக இடத்தகராறில் பெண்ணை அடித்துக் கொன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-23 20:41 GMT

பனவடலிசத்திரம்:

தேவர்குளம் அருகே மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பமாக இடத்தகராறில் பெண்ணை அடித்துக் கொன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

தனியாக வசித்த பெண்

தேவர்குளம் அருகே உள்ள வன்னிக்கோனேந்தல் கூவாச்சிப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த அண்ணாதுரை மனைவி வள்ளித்தாய் (வயது 55). இவர்களது மகன் தமிழ்ச்செல்வம். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

அண்ணாத்துரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் வள்ளித்தாய் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

மர்மசாவு

கடந்த 21-ந் தேதி வீட்டில் வள்ளித்தாய் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தேவர்குளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வள்ளித்தாய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அடித்துக்கொலை

இந்த நிலையில் போலீசாரின் தீவிர விசாரணையில், திடீர் திருப்பமாக அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளியான செங்கையா (60) என்பவர் வள்ளித்தாயை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அப்போது, அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், எனக்கும், வள்ளித்தாய்க்கும் இடையே இடப்பிரச்சினை தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கும் நடைபெற்று வருகிறது.

வள்ளித்தாய் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து அவரது வீட்டுக்குள் நுழைந்து, தகராறு செய்தேன். பின்னர் கம்பால் வள்ளித்தாயை அடித்துக் கொலை செய்தேன்.

மேற்கண்டவாறு செங்கையா வாக்குமூலத்தில் கூறிஇருப்பதாவது போலீசார் தெரிவித்தனர்.

சிறையில் அடைப்பு

பின்னர் இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி செங்கையாவை நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்