ரெயிலில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

சேலம் வழியாக கேரளாவுக்கு ரெயிலில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-27 20:08 GMT

சூரமங்கலம்:

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா செல்லும் தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்-13351) ரெயில்வே போலீஸ் தனிப்படையினர் நேற்று அதிகாலை சோதனை நடத்தினர். இந்த சோதனையானது காட்பாடி ரெயில் நிலையம் முதல் ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே நடத்தப்பட்டது.

எஸ்-7 முன்பதிவு பெட்டியில் கழிவறை அருகே 3 பைகளில் 9 கிலோ கஞ்சா இருந்ததை ரெயில்வே போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த ரெயில் பெட்டியில் இருந்த பயணிகளிடம் விசாரணை செய்தனர்.

அப்போது கஞ்சாவை கடத்தி வந்தது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கோரங்கா மாலிக் (வயது 22) மற்றும் ஷா பாலா ரானா (22) என்பது தெரியவந்தது. இவர்கள் பாலாங்கிர் என்ற ஊரில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்து, அதற்கான அபராத தொகையை செலுத்தி பயணம் செய்தது தெரியவந்தது.

மேலும் போலீசார் அவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் திருப்பூரில் உள்ள செங்கப்பள்ளி என்ற ஊரில் ஒரு குளிர்பான நிறுவனத்தில் கடந்த 3 மாதங்களாக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இவர்கள் கடந்த 21-ந் தேதி திருப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு சென்று ஒரு கிலோ கஞ்சா ரூ.3 ஆயிரத்து 500 என்ற விலைக்கு வாங்கி 9 கிலோ கஞ்சாவை சிறு, சிறு பொட்டங்களாக கட்டி ரூ.200 என்ற விலைக்கு விற்பனை செய்ய இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து கைதான 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்