இதயம் செயலிழந்த காதலனை உறுதியாக நின்று கரம்பிடித்த பட்டதாரி பெண் சினிமா பட பாணியில் நடந்த உண்மை சம்பவம்

இரு இதயம் ஓர் இதயமான என்று பல காதல் வசனங்களை சினிமாவில் பார்த்து இருப்போம். ஆனால், அதுபோன்ற உண்மை காதல் கதை நெல்லிக்குப்பம் அருகே நடந்து இருக்கிறது.

Update: 2023-08-09 20:00 GMT

பள்ளி பருவ காதல்

கடலூர் மாவட்டம் பாலூர் அடுத்த பல்லவராயநத்தம் தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனி மகன் நித்தியானந்தம்(வயது 29). டிப்ளமோ படித்துள்ளார். அதேபோன்று, பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் மகள் வினிதா(26). எம்.எஸ்சி. பட்டதாரி.

நித்தியானந்தம், வினிதா ஆகியோர் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து, பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 7 மாதத்தில் மிதுருதன் என்ற மகன் உள்ளான். இவர்களது காதல் கதை சினிமா பட காட்சியை மிஞ்சும் விதமாக அமைந்து இருப்பது தற்போது தொியவந்துள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

செயலிழந்த இதயம்

நித்தியானந்தம், வினிதா ஆகியோர் தங்களது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை கடலூாில் தொடர்ந்தனர். அப்போது பள்ளி பருவத்தில் இருந்தே இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இரு இதயம் ஓர்இதயமாக மாறி துடித்து காதல் வளர்ந்து கொண்டு இருந்தது. ஆனால் மறுபுறம் நித்தியானந்தம் இதயம் மெல்ல செயல் இழந்து வந்தது. இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை செய்து பார்க்கையில், நித்தியாந்தத்தின் இதயம் 75 சதவீதம் செயல் இழந்து விட்டதாகவும், உடனடியாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்திட வேண்டும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

யாருக்கும் இடமில்லை

இது வினிதாவின் இதயத்தில் இடியாக இறங்கியது. இருப்பினும் காதலனை கைவிட விரும்பாத அவர், தனது குடும்ப எதிர்ப்பையும் மீறி, அவருக்கு மாற்று இதயம் கிடைப்பதற்கான வழியையும் தேட தொடங்கினார்.

மருத்துவமனையில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்த நித்தியானந்தத்திடம் செல்போனில் பேசி அவருக்கு மனரீதியாக தைரியத்தையும் கொடுத்து வந்தார்.

இதனிடையே இதயம் செயல் இழந்து வரும் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க வினிதாவின் பெற்றோரும் விரும்பவில்லை. ஆனால், வினிதா, நித்தியானந்தம் வந்து தங்கிய இதயத்தில் வேறுயாருக்கும் இடமே இல்லை என்பதில் உறுதியாக நின்றார்.

நலமாக வாழ முடியும்

இவர்களது இதயபூர்வமான காதலுக்கு, கடவுளின் கருணையும் கிட்டியது. நித்தியானந்தமிற்கு மாற்று இதயம் கிடைத்து, அந்த இதயம் அவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. தொடர்ந்து, இருவீட்டார் பெற்றோர் சம்மதத்துடன் நித்யானந்தம்-வினிதாவின் திருமணம் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந்தேதி நடைபெற்றது. இவர்களது காதலுக்கு பரிசாக 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந்தேதி ஆண் குழந்தையான மிதுருதன் கிடைத்தான்.

இதுபற்றி வினிதா கூறுகையில், இதய மாற்று அறுவை சிகிச்சையால் ஒருவர் மற்றவர்களைப் போல குடும்ப வாழ்க்கையில் நலமாக வாழ முடியும். அதேபோன்று இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருப்பவர்களுக்கு நித்தியானந்தம் வாழ்க்கை நம்பிக்கை அளிப்பதாக இருக்கும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்