வீட்டின் சுவரில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது
சுத்தமல்லி பகுதியில் ஒருவருடைய வீட்டின் வெளிப்புற சுவரில், பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசப்பட்டதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.;
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி காவல் நிலைய சரகத்தில், கடந்த 2.12.2025 அன்று, வ.உ.சி. நகரைச் சார்ந்த முகமது சாதிக் என்பவரது வீட்டின் வெளிப்புற சுவரில், பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசப்பட்டதாக, அவர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேற்சொன்ன குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டதன்பேரில், சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி. அஸ்வத் அண்டோ ஆரோக்கியராஜ் தலைமையில் சுத்தமல்லி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசிய குற்றவாளி பற்றிய விவரம் கண்டுபிடிக்கப்பட்டு, குற்றத்தில் ஈடுபட்ட கீழ திடியூரைச் சேர்ந்த சிவன்பெருமாள் மகன் துரை(எ) லட்சுமணன்(21) கைது செய்யப்பட்டார். மேலும் குற்ற சம்பவம் நடந்ததற்கான காரணம் குறித்து போலீசார் அந்த வாலிபரிடம் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.