திருப்பரங்குன்றம் சம்பவம்: விஜய் பேசாமல் இருப்பது நல்லது - நாஞ்சில் சம்பத்

ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது;

Update:2025-12-05 18:23 IST

சென்னை,

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு ஐகோர்ட்டு மதுரை அமர்வு உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றாததால் வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள், மத்திய பாதுகாப்பு படையினருடன் திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு சென்று தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜிஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து மனுதாரரான ராமரவிக்குமார், சக மனுத்தாரர்கள், இந்து அமைப்பினர் 60-க்கும் மேற்பட்ட சிஐஎஸ்எப் வீரர்களுடன் திருப்பரங்குன்றம். சென்றனர். முருகன் கோவிலுக்கு அருகிலுள்ள பழனியாண்டவர் கோவில் பாதை வழியாக மலை உச்சிக்கு செல்ல முயன்றனர். அப்போது, அவர்களை அங்கு போலீசார் தடுப்பு வேலிகளை போட்டு மறைத்து அனுமதி மறுத்தனர்.நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படவில்லை என்று கூறி இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. மேலும், தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி முழக்கம் இட்டனர். அப்போது திடீரென தடுப்புகளை உடைத்து ஆர்ப்பாட்டக்கார்கள் செல்ல முயன்றனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒரு காவலர் காயம் அடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து தீபம் ஏற்றுவதற்காக சென்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். மலை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக்கு கழக தலைவர் விஜய் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் சம்பவம் தொடர்பாக விஜய் பேசாமல் இருப்பது நல்லது என இன்று தமிழக வெற்றிக்கு கழகத்தில் இணைந்த நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

திருப்பரங்குன்றம் சம்பவம் குறித்து விஜய் பேசாமல் இருப்பது ஒரு வகையில் நல்லது.திருப்பரங்குன்றம் சம்பவத்தை வைத்து குன்றம் எங்களுக்கு, குமரன் எங்களுக்கு என சொல்பவர்கள்; ஒரு கலவர அரசியலுக்கு கை, கால் முளைக்க வைக்கமுடியுமா என யோசிக்கிறார்கள்; இதில் ஒரு தரப்புக்கு ஆதரவாகவோ, எதிராகவோ கருத்து சொல்லாமல் இருப்பது விஜய்க்கு நல்லது.என தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்