தேவபாண்டலம்பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

Update: 2023-08-17 18:45 GMT

சங்கராபுரம், 

ஆடி அமாவாசை

சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக செவ்வாடை அணிந்து வந்த பக்தர்கள் தீச்சட்டிகளை ஏந்தியபடி கோவிலை மும்முறை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மன் அலங்கரிக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் எழுந்தருளினார். இதையடுத்து பூசாரிகள் தாலாட்டு பாடல் பாட ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கங்கை அம்மன் கோவில்

திருக்கோவிலூர் ஏரிக்கரை மூலையில் அமைந்துள்ள கங்கை அம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா கடந்த 8-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், இரவு வெவ்வேறு வாகனங்களில் அம்மன் வீதிஉலா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையடுத்து விழாவின் சிகர நிகழ்ச்சியான சாகை வார்த்தல், ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அம்மன் எழுந்தருளினார். அதன்பிறகு ஊஞ்சல் உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழா குழுவினர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்