வடசித்தூர் வாரச்சந்தை ரூ.6½ லட்சத்துக்கு ஏலம்
வடசித்தூர் வாரச்சந்தை ரூ.6½ லட்சத்துக்கு ஏலம் போனது.;
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடசித்தூர், ஜக்கார்பாளையம் ஆகிய பகுதிகளில் வாரச்சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் வடசித்தூர் வாரச்சந்தையில் 64 கடைகளும், ஜக்கார்பாளையம் வாரச்சந்தையில் 9 கடைகளும் உள்ளன. இந்த வார சந்தை கடைகளுக்கான ஏலம் நேற்று கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. முதலில் வடசித்தூர் பகுதியில் உள்ள வாரச்சந்தைக்கான ஏலம் நடைபெற்றது.
இந்த ஏலம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ரூ.6 லட்சத்து 43 ஆயிரத்து 500-க்கு வாரச்சந்தையை வடசித்தூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஏலம் எடுத்தார். கடந்த ஆண்டை விட ரூ.43,300 அதிகமாக வடசித்தூர் வாரச்சந்தை ஏலம் போனது. இதனையடுத்து ஜக்கார்பாளையம் வாரச்சந்தைக்கான ஏலம் நடைபெற்றது.
இந்த வாரச்சந்தை ஏற்கனவே கடந்த முறை 70 ஆயிரத்து 600-க்கு ஏலம் போனது. இதனால் ஜக்கார்பாளையம் வாரச்சந்தைக்கான குறைந்தபட்ச ஏல தொகையாக ரூ.70 ஆயிரத்து 600-ஆக அரசு நிர்ணயம் செய்தது. ஆனால் இதனை குறைக்க வேண்டும் என்று ஏலதாரர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அரசு நிர்ணயித்த தொகையை விட ஏலதாரர்கள் குறைவாக ஏலம் கேட்டதால் இந்த ஏலத்தை ஒன்றிய அதிகாரிகள் ஒத்தி வைத்தனர். ஜக்கார்பாளையம் வாரச்சந்தைக்கு மறுஏலம் வருகிற 27-ந் தேதி நடைபெறும் என்று ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.