ஊட்டி கோர்ட்டில் வாளையாறு மனோஜ் ஆஜர்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக வாளையாறு மனோஜ் மட்டும் ஊட்டி கோர்ட்டில் ஆஜரானார். மேலும் வழக்கு விசாரணை அடுத்த மாதம் 24-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2023-10-13 21:00 GMT

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக வாளையாறு மனோஜ் மட்டும் ஊட்டி கோர்ட்டில் ஆஜரானார். மேலும் வழக்கு விசாரணை அடுத்த மாதம் 24-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கோடநாடு வழக்கு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017 அன்று காவலாளி ஓம்பகதூர் படுகொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.

இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு விசாரணை, ஊட்டியில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை முடுக்கி விடப்பட்டது. மேலும் கோடநாடு வழக்கில் தடயங்களை அழித்ததாக கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தவிர 316 பேரிடம் மறு விசாரணை நடத்தப்பட்டது.

இதையடுத்து கோடநாடு வழக்கு, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையொட்டி கோவை கூடுதல் துணை கமிஷனர் முருகவேல் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீசார் தங்களது விசாரணையை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் டிரைவர் கனகராஜின் உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்து உள்ளதாக சமீபத்தில் அவரது சகோதரர் தனபால் தெரிவித்தார். மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினால், அது தொடர்பாக வாக்குமூலம் தர தயாராக இருப்பதாக கூறினார். இதனால் கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு தனபாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அடுத்த மாதத்துக்கு ஒத்திவைப்பு

இந்த பரபரப்புக்கு இடையே நேற்று ஊட்டி கோர்ட்டில் கோடநாடு வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் சி.பி.சி.ஐ.டி. தரப்பில் வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ், கூடுதல் துணை கமிஷனர் முருகவேல் உள்ளிட்டோர் ஆஜராகினர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாளையாறு மனோஜ் மட்டும் ஆஜராகினார்.வழக்கு விசாரணை தொடங்கியதும், மின்னணு ஆதாரங்கள் குறித்த அறிக்கை இதுவரை கிடைக்காததால், அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனால் வழக்கை அடுத்த மாதம்(நவம்பர்) 24-ந் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி அப்துல்காதர் உத்தரவிட்டார்.

நினைவூட்டல் கடிதம்

இதுகுறித்து வக்கீல் ஷாஜகான் கூறுகையில், தனபாலிடம் 2 முறை நடத்திய விசாரணை குறித்து நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும் கனகராஜ் பயன்படுத்திய செல்போன் மற்றும் பதிவுகள் ஆய்வகங்களில் இருந்து வராததால், அவை வந்த பிறகு வழக்கை விசாரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. உடனே குஜராத் மற்றும் கோவை ஆய்வகங்களில் உள்ள கனகராஜின் செல்போன் மற்றும் பதிவுகளை விரைவில் அனுப்பும்படி நினைவூட்டல் கடிதம் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்