அடிப்படை வசதிகள் இல்லாத கட்டிடத்தில் இயங்கும் கிராம நிர்வாக அலுவலகம்
சீர்காழி அருகே கிராம நிர்வாக அலுவலகம் அடிப்படை வசதிகள் இல்லாத கட்டிடத்தில் இயங்குவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.;
சீர்காழி அருகே கிராம நிர்வாக அலுவலகம் அடிப்படை வசதிகள் இல்லாத கட்டிடத்தில் இயங்குவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
கிராம நிர்வாக அலுவலகம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அகணி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி அகணி, தென்னங்குடி, ராமாபுரம், சொக்கன்குளம், ஏனாக்குடி, மன்னன் கோவில், கார்குடி, நந்திய நல்லூர் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கியதாகும். இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு வசிக்கும் பெரும்பான்மையானோர் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஊரில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளது. கட்டிடத்தின் மேற்கூரை சிதலமடைந்து எந்த நேரம் வேண்டுமானாலும் இடிந்து கீழே விழும் நிலையில் இருந்து வருகிறது. இதனால் இங்கு பணி புரியும் ஊழியர்கள், அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர்.
இடமாற்றம்
இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தின் அருகில் உள்ள குடிநீர், கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாமல் செயல்படும் நீர்த்தேக்க தொட்டியின் கீழ் உள்ள படிப்பகத்திற்கு தற்காலிகமாக கிராம நிர்வாக அலுவலகம் இடமாற்றப்பட்டு அங்கு செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் குடிநீர், கழிப்பிட வசதி இல்லாததால் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் இந்த அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
மேலும் போதிய இடவசதி இல்லாததால் குறுகலான கட்டிடத்தில் அலுவலகம் செயல்படுவது கிராம மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை
எனவே அரசு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சேதம் அடைந்த நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிதாக அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை கட்டித் தர வேண்டுமென பல ஆண்டுகளாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை எடுத்து வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பிரியகுமார் கூறியதாவது:- அகணி ஊராட்சியில் செயல்படும் கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாக சேதம் அடைந்து இருந்ததால் தற்போது தற்காலிகமாக அருகில் உள்ள ஒரு கட்டிடத்துக்கு அலுவலகம் இடமாற்றப்பட்டுள்ளது. இங்கு போதிய இடவசதியும், அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் பொதுமக்கள் உடனுக்குடன் சான்றிதழ் பெற முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே அங்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய கிராம நிர்வாக அலுவலகத்தை கட்ட வேண்டும். இல்லையென்றால் பொதுமக்கள் சார்பில் புதிய கட்டிடம் கட்டித்தர கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.