மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயண அட்டை இருந்தால் மட்டுமே வாகனங்களை நிறுத்த அனுமதி...!

அனைத்து பயணிகளும் மெட்ரோ ரெயில் பயண அட்டைகளை விரைவாக பெற சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Update: 2023-03-25 03:36 GMT

சென்னை,

பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு மெட்ரோ ரெயில் பயண அட்டை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த நடைமுறையானது மிகவும் திறமையான, வசதியான மற்றும் பாதுகாப்பான கட்டண முறைக்காகவும், பணப்புழக்கத்தை குறைக்க வேண்டிய தேவைக்காகவும் எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பயணிகள் வாகன நிறுத்தும் இடங்களில் வேகமாக நுழைவது, வெளியேறுவது, பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மை, பணமில்லா பரிவர்த்தனைகள் போன்ற நன்மைகள் கிடைக்கும்.

பயணிகள் மெட்ரோ ரெயில் பயண அட்டையை அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களிலும், வாகன நிறுத்தும் இடத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.

வாகன நிறுத்தும் இடத்துக்கான அனுமதி பயண அட்டைகளுடன் மட்டுமே இந்த பயண அட்டை கிடைக்கும். இந்த நடைமுறை அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி அமலுக்கு வர உள்ளது.

எனவே அனைத்து பயணிகளும் மெட்ரோ ரெயில் பயண அட்டைகளை விரைவாக பெற சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்