அடிப்படை வசதிகள் ஏற்படுத்தாததால் ஊரைவிட்டு வெளியேற கிராம மக்கள் முடிவு

அடிப்படை வசதிகள் ஏற்படுத்தாததால் ஊரைவிட்டு வெளியேற கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

Update: 2022-11-14 19:43 GMT

தாமரைக்குளம்:

குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 275 மனுக்கள் பெறப்பட்டன. இதில் செந்துறை தாலுகா வாளரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் ஊரில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகிறோம். ஆனால் எங்கள் ஊரில் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய், மருத்துவமனை உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை.

இது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோரிடம் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை. இதனால் எங்கள் ஊரை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் எங்களது உரிமைகளான ேரஷன் கார்டு, ஆதார் அட்டை மற்றும் நிலப்பட்டா அனைத்தையும் கலெக்டரிடம் ஒப்படைத்துவிட்டு, ஊரை விட்டு வெளியேற முடிவெடுத்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.

மரத்தை அகற்ற வேண்டும்

அரியலூர் மாவட்டம் வாலாஜா நகரம் பகுதியில் உள்ள 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த புளியமரம் இரண்டாக பிளந்த நிலையில் உள்ளது. மேலும் மின்சார கம்பி மீது சாய்ந்து விடும் நிலையில் உள்ளது. இது குறித்து மின்சார துறைக்கு பலமுறை தகவல் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. சில நாட்களுக்கு முன்பு தான் அதே பகுதியில், புளியமரம் விழுந்து ஒருவர் இறந்தது குறிப்பிடத்தக்கது. எனவே மரத்தை அகற்ற வேண்டும், என்று கூறியிருந்தனர்.

கூட்டத்தில், மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்