குடிநீர் கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

குழாய் பழுதால் கடந்த 15 நாட்களாக அவதிப்படும் கிராம மக்கள் குடிநீர் கேட்டு, மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணாவிடம் மனு அளித்தனர்.

Update: 2023-10-16 18:21 GMT


குறைதீர் கூட்டம்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில்கடன் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 434 மனுக்களை பெற்றார். இதையடுத்து அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர் கோகுல்பாபு தலைமையிலானோர் அளித்த மனுவில், அரியலூர் அரசு மருத்துவமனை அருகே ரெயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது மேம்பாலம் செயல்பட்டு வரும் நிலையில், சர்வீஸ் சாலை அமைக்கும் பணி இன்னும் முடிவடையவில்லை. இதனால் ரெயில் நிலையத்திற்கு செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் அவதிக்கு உள்ளாகி மாற்றுப்பாதையில் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் இப்பகுதியில் குப்பைகள் ஆங்காங்கே குவியல்களாக கொட்டப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மழை நேரத்தில் இந்த வழியாக பயணிக்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. இவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

ரூ.24 ஆயிரம் நலத்திட்டஉதவிகள்

தா.பழூர் அருகே கீழமிக்கேல்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், அந்த ஆழ்துளை கிணற்றின் குழாய் பழுதடைந்து விட்டது. இதனால் கடந்த 15 நாட்களாக குடிநீர் இன்றி மிகவும் சிரமமாக உள்ளது. எனவே நிரந்தரமாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரை கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்திருந்தனர்.

முன்னதாக, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரத்து 900 மதிப்பில் தையல் எந்திரங்களும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.6 ஆயிரத்து 552 மதிப்பில் பித்தளை தேய்ப்பு பெட்டிகளும் என மொத்தம் 4 பயனாளிகளுக்கு ரூ.24 ஆயிரத்து 904 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, தனித்துணை கலெக்டர் இளங்கோவன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டர். 

Tags:    

மேலும் செய்திகள்